நிதானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
* நீங்கள் உங்களுக்குள்ளே பெற்றிருக்கும் நிலையான சமாதான உணர்வே - நிதானம்.
* நிதானம் - நீங்கள் ஆரோக்கியமானவர்கள் என்ற செய்தியை வெளியிடும் கொள்கைப்பரப்புச் செயலாளர்.
* நிதானம் - ஆன்மீகவாதியின் அடையாளச் சின்னம்.
நிதானம் - இருந்தால் உங்கள் இல்லத்தின் பிரதமர் நீங்கள் தான்.
* கோபத்தை நாம் பயன்படுத்தினால் - அது நிதானம். கோபம் நம்மைப் பயன்படுத்தினால் அது நிதானமின்மை.
* கோபத்தை வெறும் சக்தியாகத் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே பயன்படுத்துவது நிதானத்தின் முதல்படி.
ஒரு புத்தத் துறவியின் கதையைச் சொல்கிறேன். கேளுங்கள்.
அந்த புத்தத் துறவிக்கு ஒரு எதிர்பாராத அழைப்பு வந்தது. அழைப்புக் கொடுத்ததோ ஓர் அழகான விலைமாது. "மழைக்காலம் முழுவதும் நீங்கள் என் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்" என்று கெஞ்சலோடும், கொஞ்சலோடும் புத்த துறவியை வழிமறித்துக்கேட்டாள்.
இப்படி ஓர் அழைப்பு ஒரு துறவிக்கு வரும் என்பதைப் பலரால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.
உணர்ச்சிகளின் பிடியில் இருந்து, சிற்றின்பத்தின் வலையில் இருந்து எளிதாக விலகி (விட்டுவிட்டு ஓடுதல் அல்ல) வாழ்வின் அடுத்தபடியை நிதானமாக அணுகிய ஒரு மனிதர்தான் துறவி. இப்படிப்பட்ட துறவிகள், எந்த ஒரு சூழ்நிலைக்கும் கலக்கமடைய மாட்டார்கள். இவர்களின் நிதானம் எல்லாச் சூழ்நிலைகளையும் முழுமையாகக் கொண்டாட உதவி செய்யும்.
தாமரையானது நீரின் குளுமையையும் இருப்பையும் அனுபவிக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தண்ணீரில் ஒட்டாது. தண்ணீர் முயன்றால்கூடத் தாமரையில் ஒட்ட முடியாது. தாமரை தாமரையாகத்தான் இருக்கும்.
உண்மையான துறவி இப்படித்தான் இருப்பார். சமுதாயத்தில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் அரண்மனையில் இருந்தாலும் சுதந்திரமாகச் சமாதானத்தோடு நிதானமாக இருப்பதால், அவர் யாராக இருந்தாலும் அவர் துறவியே! சந்நியாசியே!
ஒரு சிறிய புன்முறுவலோடு, "உன்னுடைய அழைப்பு உண்மையாக இருந்தால் நான் நிச்சயம் வருகிறேன்" என்றார் துறவி.
"என்ன கேள்வி கேட்டாய்? யாரைப் பார்த்துக் கேட்கிறோம் என்ற சுயநினைவோடுதான் கேட்கிறாயா? நீ ஏற்கெனவே செய்த பாவம் போதாது என்று இப்போது துறவிகளையும் பாழாக்கக் கிளம்பிவிட்டாயா?", என்று துறவி கோபப்படுவார். அதை நினைத்துச் சிரிக்கலாமே" என்று விளையாட்டாகக் கேட்ட விலைமாதுவுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி.
தடுமாற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "ம்ம்...ம். உண்மையாகத்தான் கூப்பிடுகிறேன்" என்றாள். துறவி, "வருகிறேன். ஆனால் புத்தருடைய அனுமதியைப் பெற்றபின் வருகிறேன். அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும்" என்றார்.
விலைமாது, "தாராளமாகப் பொறுத்திருக்கிறேன்" என்றவள்.
"வருகிறேன் என்று வாக்குக் கொடுத்தபின் புத்தரின் அனுமதி தேவையா?" என்றாள்.
துறவியோ, "வருகிறேன் என்று வாக்குக்
கொடுத்தது, என் நிதானத்தின் மீது
எனக்கிருந்த அனுபவத் தெளிவு. அனுமதி
கேட்பது என்னுடைய கடமை" என்றார்.
மறுநாள் புத்தரின் சொற்பொழிவு
முடிந்தவுடன் துறவி புத்தரிடம், "ஒரு
விலைமாது என்னை வழிமறித்து, இந்த
மழைக்காலம் முழுவதும் அவள் மாளிகையில்
நான் தங்கும்படி அழைப்பு விடுத்தாள்"
என்றார்.
புத்தர், "நீ ஏனப்பா இதற்கெல்லாம்
என்னிடம் அனுமதி கேட்டுக்
கொண்டிருக்கிறாய்! விலைமாதுவைப்
போன்ற ஒரு சாதாரணப் பெண்ணிடம்
சலனமடைந்தால் அவன் உண்மையான
துறவியாக இருக்க முடியாது.
உண்மையான துறவியை எந்த ஒரு பெண்ணாலும் சலனப்படுத்த முடியாது.
சலனப்படாமல் என்னுடைய அனுமதிக்காக மாத்திரம் காத்திருக்கும் நீ ஓர் உண்மையான சன்யாசி. தைரியமாகப் போய் வா. உனக்கு விலைமாதுவின் மாளிகையும் புத்தமடமும் ஒன்றே. மழைக்காலம் முழுவதும் ஓய்வாக இருந்து திரும்ப வா" என்றார்.

நிதானம்தான்
நீ
செய்யும்
தானங்களிலேயே
சிறந்த தானம்!
நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி, திருப்தி, சந்தோஷம் - பலநூறு தானங்கள் செய்தாலும் கிடைக்காது!
துறவி விலைமாது வீட்டிற்குச் சென்றார். விலைமாது அன்போடு வரவேற்று, ஆசைதீர உபசரித்தாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடினாள். விதவிதமான உடைகள், வகைவகையான உணவுகள் புதுப் புதுக்கொண்டாட்டங்கள் என்று தனக்குத் தெரிந்த எல்லா யுக்திகளையும் பயன்படுத்திவிட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் நடுங்க ஆரம்பித்து விட்டாள்.
ஏனென்றால், ஒரு சராசரி மனிதன் என்றால் இந்நேரம் அவளுக்கு அடிமையாகியிருக்க வேண்டும். ஆனால் இவரோ, எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரே தெளிவோடு இருந்தார். அவருக்குள் இருந்த சமாதானத்தை, நிதானத்தை இம்மி அளவுகூட விலைமாதுவால் அசைக்க முடியவில்லை. என்ன நடந்தாலும் நிதானமாக இருக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்ற கேள்வி மனதில் எழ ஆரம்பித்தது.
ஒரு நாள் காலையில் துறவியின் காலைப் பிடித்துக்கொண்டு விலைமாது அழுது கொண்டிருந்தாள்.
"பெண்ணே, ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார் துறவி, விலைமாது, "இதற்கு மேலும் என்னால் நடிக்க முடியாது. எப்படி உங்களால் மாத்திரம் இவ்வளவு நிதானத்தோடு இருக்க முடிகிறது? அதன் ரகசியம் எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
துறவி அது மிகவும் சுலபம்.
முதலில் எவ்வளவு சலனப்படுகிறாய் என்பதையும் எவ்வளவு மனத்தடுமாற்றம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடி. பாதிப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
| நீ தா ன ம் | நம்முடைய நிதானத்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கிடைக்கும் நிம்மதி, திருப்தி, சந்தோஷம் பல நூறு தானங்கள் செய்தாலும் கிடைக்காது! |
இரண்டாவது, சலனப்படும் பொழுதெல்லாம் விழிப்புணர்வோடு இரு. எவ்வளவு சலனப்படுகிறாய், எப்படிச் சலனப்படுகிறாய், எதற்காகச் சலனப்படுகிறாய் என்று தெரிந்து, முழுஉணர்வோடு இரு. தொடர்ந்து விழிப்புணர்வோடிருக்கும் உனக்குள் ஒரு மாற்றம் நிகழும்" என்றார்.
விலைமாது துறவி போதித்த போதனைகளைத் தன் நடைமுறை வாழ்வில் உபயோகித்தாள். தொடர்ந்து உபயோகிக்க கொஞ்சம் கொஞ்சமாக நிதானம் வளர்வதை உணர்ந்தாள்.
என்ன ஆச்சரியம்! அடுத்த ஒரு மாதத்தில் மழைக்காலம் முடிந்தது. துறவி "விடைபெறுகிறேன்" என்று சொல்லிக் கிளம்ப முற்படும்போது...
"என்னையும் புத்தரிடம் கூட்டிச் செல்லுங்கள். நானும் ஒரு துறவியாக மாற ஆசைப்படுகிறேன்" என்றாள், வெகு நிதானமாக. நிதானம் என்பது நிஜமான சமாதானம். நிதானம் என்பது நிஜமான சுதந்திரம். நிதானம் என்பது நிஜமான நிம்மதி. நிதானமின்மையிலிருந்து நிதானத்திற்கு மாற 'விழிப்புணர்வு' என்ற விசா இருந்தால் போதும் நிதானத்தை அடைந்துவிடுவீர்கள்.
நிதானத்தின் அருமையை உணர்ந்த நீங்கள் நிச்சயமாக நிதானத்தை அடைய ஆவலோடு காத்துக்கொண்டிருப்பீர்கள்.
நிதானம் O.K! நிதானமின்மை என்றால் என்ன?
நிதானமின்மையிலிருந்து, நிதானத்தை அடைவது எப்படி?
நிதானமின்மைதான் தடுமாற்றமா?
என்பது போன்ற உங்களுக்குள் தோன்றும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவேண்டுமென்றால் 'நிதானமின்மை' கட்டுரையைப் படியுங்கள்!