KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?Sign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • பொதுப்படையாகக் கூறவேண்டுமானால் - அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டுமே அதனதன் விருப்பப்படி வாழ்வில் வந்து போகும் விஷயங்கள்.
  • வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும் பக்குவமும் இருந்தால் மாத்திரமே அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும். துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.
  • கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை புரிய வரும். “அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்பட்ட நிலைகள் இல்லவே இல்லை” என்று தெரிய வரும்.
  • சுலபமாகக் கைநோகாமல், அதிகம் உழைக்காமல் நல்ல பலனைக் கொடுத்த வாழ்க்கை அம்சங்களை நாம் அதிர்ஷ்டம் என்று கூறிச் சந்தோஷப்படுகிறோம்.

கைநோக, உடல்நோக உழைத்தும், எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை அம்சங்களுக்கு, நாம் துரதிர்ஷ்டம் என்று கூறித் துக்கப்படுகிறோம்.

  • துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற இரண்டு வாழ்க்கை அம்சங்களும் பலனின் அளவைப் பொறுத்தது. மனதின் துக்க, சந்தோஷ நிலையைப் பொறுத்தும் அவை மாறுகின்றன.

உங்களுக்குக் கிடைக்கும் பலன்களும் உங்களின் மனநிலையும் சேர்ந்துதான் - அதிர்ஷ்டத்தை அல்லது துரதிர்ஷ்டத்தை உருவாக்குகின்றன.

* வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்தத் துடிப்பவருக்கு நீங்கள் கற்பனை செய்யும், ‘அதிர்ஷ்டங்கள் பல’வாழ்வில் காத்துக் கொண்டிருக்கின்றன.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் மந்தமாக நேரத்தை வீணடிப்பவருக்கு, நீங்கள் கற்பித்துக்கொள்ளும், ‘துரதிர்ஷ்டங்கள் பல’ காத்துக்கொண்டிருக்கின்றன.

முன்பொரு காலத்தில் சீன நாட்டில் விவசாயி ஒருவர் இருந்தார். ஓர் ஆண்டில் சரியான மழை இல்லாமல் போகவே, பயிர்களெல்லாம் வாடிக் கருகி விட்டன. ஆனால், அந்தக் குடியானவரின் நிலத்தில் விளைச்சல் அமோகமாக இருந்தது. எல்லோரும் அவரைப் பாராட்டினார்கள். அவரை அதிர்ஷ்டக்காரன் என்று புகழ்ந்தார்கள். அவரோ, “அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்கு எதுவும் விளங்கவில்லை. அதுபோன்று நீங்கள் உளறுவதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை” என்றார்.

அவர் அறுவடைக்குத் தயாரான போது, முந்தையநாள் இரவு, மலைப் பிரதேசத்துக்கு குதிரைகள் வந்து, விளைந்து கிடந்த அவரது கோதுமைப் பயிர்களைச் சூறையாடி விட்டன. எல்லாக் குடியானவர்களும் திரண்டு வந்து, “இப்படி ஒரு துரதிர்ஷ்டம் உனக்கு வந்துவிட்டதே” என்றார்கள். அவரோ, “அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது” என்றார்.

அந்த விவசாயியின் மகன் நான்கு மலைக் குதிரைகளைப் பிடித்துப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டான். மலைப் பிரதேசத்தில் காட்டுக் குதிரை மேல் சவாரி செய்ய, கீழே விழுந்து அவனது கால் ஒடிந்துபோயிற்று.

எல்லோரும் திரண்டு வந்து “குதிரைகள் கிடைத்தது அதிர்ஷ்டம்; உன் மகனுக்குக் கால் ஒடிந்தது துரதிர்ஷ்டம்” என்றார்கள். அந்தக் குடியானவனோ “அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது” என்றார்.

அன்று மாலையே பட்டாளத்திற்குக் கட்டாயமாக ஆள் சேர்க்க இராணுவம் அந்த ஊருக்கு வந்தது. நொண்டியாக இருந்த அந்த இளைஞனை விட்டுவிட்டு, மற்ற இளைஞர்களைப் பிடித்துக்கொண்டு போனார்கள். ஊரில் உள்ள குடியானவர்கள் எல்லோரும் அவனிடம் வந்து “இது உன் அதிர்ஷ்டம்” என்றார்கள். அவரோ, “இது அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியாது” என்றார்.

வாழ்க்கையில் எப்போதுமே ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், இந்த விவசாயியின் மனநிலை நம் எல்லோருக்கும் நிச்சயமாக வேண்டும். அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அது பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கத் தேவை இல்லை.

நம் கடமை உழைத்துக்
கொண்டிருப்பதுதான். அது கிடைக்கும்,
இது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு
எதுவும் இல்லாமல்,
உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்.
“கடமையைச் செய். பலனை
எதிர்பார்க்காதே” என்று பகவான்
கிருஷ்ணர் சொன்னதன் அர்த்தம்
தேக்கமடையாமல் இயங்கிக் கொண்டிருக்க
வேண்டும் என்பதுதான்.

portrait

அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு! துரதிர்ஷ்டம் பயந்தாங்கொள்ளிகளின் பீதி! சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும் வாழ்வில் முதிர்ந்துகொண்டே இருப்பார்கள்!

உழைப்பதனால் வெற்றி
கிடைக்கவில்லையே என்று பலரும்
ஆதங்கப் படுகிறார்கள். உழைப்பே
ஒருவகை வெற்றி தான் என்பதை அவர்கள்
அறிந்து கொள்ளவில்லை. உழைப்பை
ஆழமாக்கினால் துரதிர்ஷ்டத்தை
அதிர்ஷ்டமாக மாற்றலாம்!

மாவீரன் அலெக்ஸாண்டர், உலகத்தைப் பாதிக்குமேல் வென்றுவிட்டோம் என்கிற ஆர்வத்தில் திரும்பிக்கொண்டிருந்தான். அவனது நகரத்திற்குப் பக்கத்தில் ஒரு பாதையில் அமர்ந்திருந்த மகாஞானி ஒருவரைக் கண்டார். இந்த உலகத்தையே வென்று கொண்டிருக்கிறேன் என்று அவரிடத்தில் சொல்லப்போனான்.

அவரோ சர்வ அலட்சியமாகத் தமது வலது கையைக் காட்டி, மௌனமாக அவனை “விலகி நில்” என்று சொல்லாமல் சொன்னார். மகா அலெக்ஸாண்டருக்கு, அவர் எதற்காகத் தன்னை விலகி நிற்கச் சொன்னார் என்பது விளங்கவில்லை. பூமிக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருக்கிற மாலை வெயிலின் மயக்கத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அந்தந்த நிமிடத்தை அனுபவித்து வாழும் ஞானிக்குப் பேரரசனே ஆனாலும், அவனைப் பற்றி இம்மி அளவுகூட பயம் எழாது. எப்போதும் ஆனந்தமயமாக இருக்கிற ஒரு ஞானி, மகா அலெக்ஸாண்டரைக்கூடப் பொருட்படுத்த மாட்டார். காரணம் - அவரிடம் பயம் இல்லை.

பயம் என்ற ஒரு மனப்புண்தான், துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின் சாதாரண அம்சத்தைப் பெரிதுபடுத்திக் காண்பிக்கும். பயத்தை விட்டொழித்து விட்டுத் தைரியமாக வாழ்க்கையை அணுக ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பயமுறுத்தாது.

'எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே... எனக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்குமா?' என்ற ஏக்கம் இருக்காது.

பயத்திலிருந்து மனதைத் தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.

மனதின் பயமும் உழைப்புக் குறைவும்தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்புத் தீயை மூட்டுகிறது. அதே விஷயங்கள்தான் துரதிர்ஷ்டத்தை, உங்களால் ஜீரணிக்க முடியாத - சாதாரண வாழ்க்கை அம்சங்களைச் சுற்றித் துக்கப் புகையைக் கிளப்பி விடுகின்றன.

துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால் ஜீரணிக்க முடியாத சாதாரண வாழ்க்கை அம்சம்.

| அ தி ர் ஷ் ட ம் | | பயத்திலிருந்து மனதை தைரியத்திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக்கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்! |

அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும் துரதிர்ஷ்டத்தை நினைத்துத் துக்கப்படுவதும் புத்திசாலி செய்யும் காரியம் அல்ல.

புத்திசாலி, புத்தியைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா அம்சங்களிலும் புகுந்து, ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்ட புதுத்தெம்போடு, வெளியே வருவான்.

தைரியமாக சுறுசுறுப்போடு வாழ்க்கையை அணுகுங்கள். சாதாரண வாழ்க்கை அம்சங்கள், அதிர்ஷ்டமாக மாறும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று பலராலும் பிரமிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்டத்தின் சூட்சுமம் இதுதான்.

வாழ்வில் கொட்டிக் கிடக்கும் அதிர்ஷ்டங்களை, உங்களுக்குச் சொந்தமாக்குங்கள் அதிர்ஷ்டசாலியாகுங்கள்!