தியான சத்சங்கம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சொல்லப்படும் வார்த்தைகளால், நம் உணர்வைத் தொட்டு, அதை நம் அனுபவமாகவே மாற்றுவதற்கான யுக்திகளை அளிக்கும் ஒரு களமே தியான சத்சங்கம்.

தியான சத்சங்கம், ஒரு சாதாரணமான சொற்பொழிவு அல்ல.
பொதுவாக, நாம் ஒரு சொற்பொழிவிற்குச் சென்றுவிட்டு வெளியில் வரும்பொழுது, ஏற்கனவே நாம் தலையில் இருந்த செய்திகளையும் சுமைகளையும்விட, பேச்சாளரின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு இன்னும் சிறிது சுமையையும் சேர்த்துக் கொண்டு அதிகமான சுமைகளுடன் வெளியே வருவோம். சொற்பொழிவு என்பது உங்கள் தலைச்சுமையை, ஒரு விதத்தில் தலைக்கனத்தை அதிகரிக்கும் ஒரு நிகழ்ச்சி. தியான சத்சங்கம் என்பது, உங்கள் தலையில் இருக்கும் சுமையை இறக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சி.
உங்கள் தலைக்குள் மேலும் மேலும் வார்த்தைகளைத் திணிப்பதற்காக சத்சங்கம் நடத்தப்படவில்லை. உங்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை அனுபவமாக, அனுபூதியாக மாற்றுவதற்குத்தான் இந்த சத்ச ங்கங்கள். பொதுவாகவே, நாம் அனைவரும் அனுபவத்தை நோக்கிப் பயணிப்பதாகவும், ஆன்மிக அனுபவம் நமக்கு வேண்டும் என்றும், நமக்கு நாமே ஒரு தவறான கற்பனையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜவாழ்க்கையில் நாம் ஆன்மிகத்தையும், ஆன்மிக அனுபவத்தையும் ஏற்றுக் கொள்வதே இல்லை. மேலோட்டமாக, ஆன்மிகம் சம்பந்தம் இல்லாத எந்தச் செயலை வேண்டுமானாலும் நாம் ஆன்மிகத்தின் பெயரால் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமக்குள் ஒரு பெரிய மாற்றத்தை எடுத்துவரும் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. தம்மை மாற்றிக்கொள்ள இயலாத தைரியமின்மையே, ஆன்மிகத்தைப் பார்த்ததும் பயமாக வெளிப்படுகிறது. ஞானக் கருத்துக்களும் தியான சக்தியும் சமவிகிதத்தில் ஒன்று சேரும்போது மட்டுமே, அறிவு அனுபவமாகி, அனுபூதி நோக்கி அழைத்துச் செல்லப்படுவீர்கள். முக்தி சித்திக்கும்.