தடுமாற்றத்தையே தடுமாறச் செய்யலாம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தடுமாற்றமே மனம். இரட்டைத் தன்மை இருக்கும்வரை மனமும் இருக்கும். சூழ்நிலையை நல்லது, கெட்டது என்று நாம் அறிவுப்பூர்வமாக எடைபோடும்வரை மனம் இருக்கும். இந்தத் தடையை நாம் தாண்டியாக வேண்டும். சுவரைத் தகர்த்தாக வேண்டும். ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது, இதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்ற தடுமாற்றம் இனி வரவே கூடாது.
நினைவில்வைத்துக்கொள்ளுங்கள், தடுமாற்றம் என்பது இருக்கிறவரையில், மனம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும்.
பல நேரங்களில் மக்கள் என்னிடம் வரும்பொழுது, நான் அவர்களை எதையாவது செய்யச் சொல்லிக் கேட்பேன்.
"சரி செய்கிறேன்," என்று அவர்கள் சொல்லுகிற முறையை வைத்தே, உண்மையிலேயே அதைச் செய்வதற்கு அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைச் சொல்லிவிடுவேன். நம் மனம் இயங்கிக்கொண்டிருக்கும்போதும், நாம் குழப்பத்திலிருக்கும்போதும், ஒரு பொறுப்பை எடுத்துக் கொள்வதில் நமக்குத் தடுமாற்றம் இருக்கும்.
பொறுப்பை இயல்பாக நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது, மனம் சொல்வதற்கு ஒன்றுமே இருக்காது. நமக்குத் தெரியும். அவ்வளவுதான்.
நாம் மனத்தில் மிகவும் தளர்வான நிலையிலும் தன்னிச்சையாகவும் இயங்குவோம்.
இயல்பாகச் செயல்படும் திறமையைத்தான் பொறுப்புணர்வு என்கிறோம். நாம் மனத்தைக் கடந்து செல்லும்பொழுதுதான், இருமைத் தன்மையைத் தாண்டிய பூர்ணமான ஒருமைத் தன்மையையும், ஒத்திசைந்து இயங்குகிற தெய்வீகத்தின் தன்மையையும் பார்க்கிறோம். தெய்வீகத்துடன், பிரபஞ்ச இருப்புத் தன்மையுடன் நாம் ஒன்றாகிய நிற்கிற நிலையில்தான், நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
> தடுமாற்றம் என்பது
> இருக்கிறவரையில்,
> மனம் என்பது
> இயங்கிக்கொண்டே
> இருக்கும்.
நாம் இந்த நிலையை அடையும்பொழுது, செயல்படுவதற்கு அங்கே மனம் இருக்காது. நாம் ஆழமான தளர்வான நிலையில் அல்லது ஆனந்தத்தில் இருக்கிறோம். நாம் இந்த நிலையில் இருக்கும்பொழுது, அது தன்னிச்சையாக பதில்செயல் புரிகிற திறமையை நமக்குள் உருவாக்குகிறது.
நல்ல செயல்களைச் செய்வதற்கு இது நமக்கு மிகவும் முக்கியம். உண்மையாகவே மற்றவர்கள்மீது தூய்மையான, நேர்மையான அன்பு இருப்பதை நாம் உணரும்பொழுது மட்டுமே, நாம் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.
ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடமும் நாம் அந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். ஆனந்தத்தோடு நாம் செயல்புரியும்பொழுதுதான், நாம் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்காகச் செய்வோம்.
தடுமாற்றம் இல்லாமலிருக்கும்போதும்,
தன்னிச்சையாக நாம் பொறுப்பை
எடுத்துக்கொள்ளும்போதும், நாம்
ஆசையினாலோ, அச்சத்தினாலோ
செயல்படமாட்டோம்.
நாம் சேவையை மட்டுமே செய்து கொண்டிருப்போம், நாம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருப்போம். நமக்கு அங்கே எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை, ஆசையும் இல்லை, அச்சமும் இல்லை. நாம் எப்போதும் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
நாம் அச்சத்தினாலோ அல்லது பேராசையினாலோ தூண்டப்பட்டு ஒரு செயலைச் செய்தோமென்றால் அது நல்ல விஷயமாக இருந்தால்கூட, தொந்தரவில்தான் முடியும். அது ஒரு சேவையாக முடிவு பெறாது.
கேள்வி: ஸ்வாமிஜி, புலன்களினால் ஏற்படுகிற தொல்லைகளை அழு த்தத்தை ஒருவர் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அதைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான திறமை என்னிடத்தில் இல்லை. எனக்கு உதவி தேவை.
சரியாகச் சொன்னீர்கள். அது அந்த அளவுக்குச் சுலபமானதென்றால், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஞானமடைந்திருப்பார்கள். ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான், ஏனெனில் பல ஞானமடைந்தவர்கள் அதைச் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
இதை அடைய உங்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. பொறுப்பும் பொறுமையும். இதைத்தான் நாம் தபஸ் என்கிறோம். சிலர் ஸ்பானிஷ் மொழியில் மதிய சிற்றுண்டிக்கு 'தபஸ்' என்ற வார்த்தை இருப்பதாக என்னிடம் சொன்னார்கள்! இல்லை, இது அது இல்லை! தபஸ் என்றால் வழக்கமாக நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல் கிடையாது; அது, ஒரு பாதத்தில் நின்றுகொண்டு, மற்றொரு பாதத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது அல்லது ஒரு கையை உயர்த்திக் கொள்வது அல்லது தண்ணீருக்குள் நிற்பது அல்ல.
தம்மை உணர்ந்து கொள்வதற்காக, தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்து கொள்வதற்காக ஒருவர் ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் அதன் மூலம் ஏதாவதுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எதுவுமின்றியும் மேற்கொள்கிற பொறுப்புகளைதான் தபஸ் என்ற வார்த்தை குறிக்கிறது.
தபஸ் என்பது மனத்தின் ஒருநிலை. அதை வளர்த்துக்கொள்ள முடியும். அதில் வெற்றி பெற, குருவிடமும் குரு அருளிடமும் ஆழமான பக்தியும் சஃரணாகதி உணர்வும் இருக்க வேண்டும்.
'ஜீவன் முக்த நிலை' என்று எதைச் சொல்கிறேனோ, அதைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். எதையாவது அது சரியா தவறா என்று உறுதியாகத் தீர்மானிக்க வேண்டிய தேவை எழும்பொழுது அல்லது விழிப்புணர்வுடன் செயலைச் செய்து கொண்டிருக்கும்பொழுது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், "இந்தச் சூழ்நிலையில், இந்தச் செயலை என்னுடைய குரு எப்படிச் செய்திருப்பார்?" என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
அதன் பின்னர், குரு என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களோ அதே வழியில், அதே முறையில் அதைச் செய்துவிடுங்கள்.
இது ஒரு ஸூத்ரம். உடனடியாக
ஞானமடைவதற்கான ஒரு நுட்பம்.
உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய
குருவைத் தவிர ஒரு பெரிய வழிகாட்டியாக,
> தபஸ் என்பது
> மனத்தின் ஒருநிலை.
> அதை
> வளர்த்துக்கொள்ள முடியும்.
> அதில் வெற்றிபெற,
> குருவிடமும்
> குரு அருளிடமும்
> சஃரணாகதி
> அடைய வேண்டும்.
ஒரு நல்ல முன் மாதிரியாக வேறு யார் இருக்க முடியும்.
நீங்கள் அவருடைய போதனைகளை ஆழ்ந்து உள்வாங்கியிருந்தால், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர் எவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என்பதற்கான பதிலை உறுதியாக நீங்கள் பெற முடியும். அதை அப்படியே அதே முறையில் செய்துவிடுங்கள்.
நான் இந்த நுட்பத்தைப் பற்றி பேசிய பிறகு, என்னுடைய சீடர்களில் ஒருவர் ஒரு சம்பவத்தை விவரித்தார். அவர் ஒரு வேலையாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, அந்த நடைபாதையில் விழுந்து கிடந்த ஒரு நபரைக் கடந்து சென்றார். பொதுவாக அவர் வேகமாக நடக்கக்கூடியவர். அன்றைக்குக்கூட அதே போன்றுதான் சென்றார். ஆனால் என்னுடைய வார்த்தைகளை நினைவு கூர்ந்தபொழுது அவருடைய கால்கள் நகர மறுத்து, அவரை விழுந்து கிடந்த அந்த நபரிடம் இழுத்துச் சென்றன. அவர் ‘மருத்துவ உதவி மையத்திற்கு’ தொடர்புகொண்டு, அவர்களை வரவழைத்து, உதவிகள் வந்து சேருகிற வரைக்கும் அந்த நபருடனேயே தங்கினார்.
ஒவ்வொரு முறை நீங்கள் இதைச் செய்யும்போது, உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்து, உங்களுடைய இயல்பூக்க நடவடிக்கைகளை அதாவது விழிப்புணர்வற்ற நிலையில் நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சில படிகள் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெறுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் புலன்களுக்கு இடம் கொடுத்தாலும்கூட, அதுவும் நல்லதுதான். செயல்களை அடக்கி வைக்காதீர்கள். அப்படி இடம் கொடு த்ததற்காகக் குற்ற உணர்ச்சிக்குள் விழுந்துவிட வேண்டாம். நீங்கள், ‘நாம் வேறு முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வை உங்களுக்குள் பெறுகிறீர்கள், அதுபோதும். அந்த விழிப்புணர்வும் குருவின் வார்த்தைகள்மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் சேர்ந்து, நீங்கள் வேறு முறையில் நடப்பதற்கு உதவும். இந்த வழியில் படிப்படியாக நீங்கள் உணர்வுமாற்றம் அடைவீர்கள்.
