KAILASA Library/பகவத்கீதை/உங்களின் சொந்த தெய்வீகத்தை உணர்த்த வந்தவர்கள்Sign in
பகவத்கீதை

உங்களின் சொந்த தெய்வீகத்தை உணர்த்த வந்தவர்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இரண்டாம் வகையான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘கிருஷ்ணர் ஒருவர்தான் கடவுள்,’ மற்ற யாரும் கடவுள் கிடையாது என்று சொல்பவர்கள். அப்படிப்பட்ட ஒரு குழு என்னைச் சந்தித்து, “ஸ்வாமிஜி, உங்கள் உரையில் இருந்து, நீங்கள் கிருஷ்ணர் தெய்வீகமானவர் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தெரிகிறது,” என்று சொன்னார்கள்

அவர்களிடம், “ஐயா நான் அதை முழுமையாக நம்புகிறேன். அது மட்டுமல்ல, கிருஷ்ணர் ஒரு பூர்ண அவதாரப் புருஷர் என்பதிலும் சந்தேகம் இல்லை,” என்றேன்.

“அப்படியானால், நீங்கள் சிவனை எப்படி வணங்கலாம்? உங்கள் பெங்களூரு ஆச்ரமத்தில் தக்ஷிணாமூர்த்தி விக்ரஹத்தை எப்படி வைத்து வழிபடலாம்?” என்றார்கள்.

நான் அவர்களிடம், “உங்களுக்கு மகாபாரதத்தில் ‘அனு கீதை’ என்று இன்னொரு கீதை இருக்கிறது தெரியுமா? அதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அதைப் படித்தது இல்லை,” என்று சொன்னார்கள்.

பின்பு அவர்களுக்கு விளக்கினேன். போர்
முடிந்த பிறகு, அர்ஜுனன் கிருஷ்ணரிடம்
போய், “கிருஷ்ணா, எனக்கு நீங்கள் செய்த
கீதா உபதேசம் மறந்து விட்டது. அதை
மீண்டும் எனக்குச் சொல்லமுடியுமா?” என்று
கேட்டார்.

உடனே கிருஷ்ணர், “ஓ! நீ மறந்துவிட்டாயா?
நானும் அன்று உனக்கு என்ன
சொன்னேன் என்பதை மறந்து விட்டேன்,”
என்றார்.

அர்ஜுனனுக்கு ஆச்சரியமாக இருந்தது, “அது எப்படிச் சாத்தியம் கிருஷ்ணா? நீங்கள் எப்படி மறக்க முடியும்?” என்று கேட்டார்.

கிருஷ்ணர் விளக்கினார், “அர்ஜுனா, அப்பொழுது நான் பரப்ரம்ம கிருஷ்ணராக இருந்தேன். நான் பகவானாக இருந்தேன்; நான் தெய்வீகத்தில் இருந்தேன்; ஆனால் இப்பொழுது நான் வஸுதேவரின் மகனான வாஸுதேவ கிருஷ்ணராக இருக்கிறேன்.

அதனால் நான் பரப்ரம்ம கிருஷ்ணராக இருந்து என்ன பேசினேன் என்பது இப்பொழுது எனக்கு நினைவில்லை. இருந்தாலும் நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்,” என்றார்.

அவர் அப்படி ஞாபகப்படுத்திச் சொன்னதுதான் ‘அனுகீதை.’ கிருஷ்ணர், பரப்ரம்ம உணர்வு நிலையில் இருக்கும்போது, சிவன் விஷ்ணு தேவி இவர்களைப் போன்றே தெய்வீகமானவராகவும் உருவமற்ற ப்ரம்மமாகவும் இருக்கிறார். ப்ரம்மத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும் மற்ற தெய்வங்களைப் போன்றே கிருஷ்ணரும் புருஷோத்தமராக, அவரே இறுதியான ஸத்யமாக இருக்கிறார்.

இராமரும் கிருஷ்ணரும் ஒரே சக்திதான்; இதைப் புரிந்துகொள்ளாத இராமரின் குரங்குகளும், கிருஷ்ணரின் பசுக்களும்தான் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.

கிருஷ்ணர், உபநிஷதங்கள் குறிப்பிடும் பூரணமானவர்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதுவும் பூரணம், இதுவும் பூரணம். அந்தப் பூரணத்திலிருந்து இந்தப் பூரணம் தோன்றியது. இந்தப் பூரணத்தை அந்தப் பூரணத்திலிருந்து எடுத்துவிட்டாலும் பூரணம் பூரணமாகவே இருக்கிறது.

பூரண நிலையில், ப்ரம்மமே விஷ்ணுவாக, சிவனாக, தேவியாக மற்ற தெய்வீக சக்திகளாகவும் வெளிப்படுகிறது. அதுபோல கிருஷ்ணரும் பரப்ரம்ம உணர்வு நிலையில் இருக்கும்போது, அவரே சிவனாகவும் விஷ்ணுவாகவும் தேவியாகவும் இருக்கிறார். இவர்கள் எல்லோருக்கும் பின் இருக்கும் அடிப்படையான சக்திக்குப் பெயரும் கிடையாது உருவமும் கிடையாது, அதுதான் உண்மை.

கிருஷ்ணரை பகவான் என்று மீண்டும் மீண்டும் கீதையில் சொல்வதற்கான காரணம், கிருஷ்ணர் ஒரு சாதாரண தேரோட்டி அல்ல, பார்தஸாரதி அல்ல, கேசின் என்ற அரக்கனைக் கொன்ற கேசவன் அல்ல, மது என்ற அரக்கனைக் கொன்ற மதுசூதனன் அல்ல, அவர் பரப்ரம்ம கிருஷ்ணர், பெயரும் உருவமும் இல்லாத ப்ரம்மன் என்பதைக் குறிப்பதற்காகத்தான் பகவான் என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார்.

இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் சொல்வதற்கான காரணம், நீங்களும் அர்ஜுனனைப்போல கடவுளே! அதைவிட குறைவானவர் இல்லை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.

கிருஷ்ணரின் தெய்வீகத்தை ஏற்றுக்கொள்ளவதும், புரிந்துகொள்வதுமே நம் சொந்த தெய்வீகத்தை உணர்ந்துகொள்வதற்கு புரிந்துகொள்வதற்குமான முதல் படி. அந்த விழிப்புணர்வு நம்மை முக்திக்கு எடுத்துச் செல்கிறது. அதனால்தான் ஆதிசங்கரர் சொல்கிறார், "பகவத்கீதையை ஒரு சிறிது படித்தாலும்போதும்; அது உங்களை மரணத்திலிருந்து விடுதலை செய்துவிடும்."