தடைகளைத் தகர்த்து வெற்றிக்கு வழிவகுக்கும் குருவின் திருவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கிருஷ்ணர், அர்ஜுனனை க்ஷத்ரியன் என்று சொல்லும்போது அவர் அர்ஜுனனின் தனித் தன்மையைக் குறிக்கிறார். ஒருவகையில் அர்ஜுனன் பிறப்பால் ஒரு க்ஷத்ரியனாக இருந்தாலும் போர்புரிவதிலும் அரசு ஆள்வதிலும் அவருக்கு இருந்த ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டே அவருக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. அதைக் குறித்தே அவர் க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகிறார். அர்ஜுனன் பயம் என்பதையே அறியாத ஒரு சாமுராய் வீரர்.
ஆனால் தம் உறவுக்காரர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டிய சூழ் நிலை உருவானபோது, தாம் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் அவருக்கு வந்து விடுகிறது. க்ஷத்ரியர்களாகட்டும், இன்றைய படைவீரர்களாகட்டும், ஜப்பான் நாட்டுப் போர்வீரர்களான சாமுராய் வீரர்களாகட்டும், அவர்கள் அனைவருக்கும் நடைமுறை விதிகள் ஒன்றுதான். போர் என்று வந்துவிட்டால் எதிரி யார் என்று பார்க்காமல் சண்டை போட வேண்டும். எது சரி, எது தவறு என்று பார்க்க முடியாது.
> ஒரு க்ஷத்ரியனுக்கு
> மரணத்தைவிட,
> அவமரியாதை
> என்பதுதான்
> மிகக்
> கொடுமையானதாக
> இருக்கும்.
கிருஷ்ணர் சொல்கிறார், "போர் செய்! நீ ஒரு க்ஷத்ரியன். உன் கடமை போர் செய்வது. அதைச் சரியாகச் செய்யும் போது உனக்குச் சமுதாயத்திலும் பலன்கள் கிடைக்கும் சொர்க்கமும் கிடைக்கும். போரில் இருந்து நீ ஓடிவிட்டால், நீ பாவம் செய்தவனாவாய். உனக்குக் கோழை என்ற பட்டம்தான் கிடைக்கும். இதனால் மக்கள் உன்னைப் பார்த்து ஏளனம் செய்வார்கள். உன்னை அவமரியாதை செய்வார்கள். ஒரு க்ஷத்ரியனுக்கு அவமரியாதை என்பது மரணத்தைவிட மிகக் கொடியதாக இருக்கிறது.
வெற்றி தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதே. நீ போரில் கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய். நீ வெற்றி பெற்றால் இந்த உலகத்திலேயே சகல இன்பங்களையும் அனுபவிப்பாய். அதனால் க்ஷத்ரியனாக நீ உன் தர்மப்படி போர் செய்."