KAILASA Library/பகவத்கீதை/பிறப்பிற்கு முன்பும் இருந்தோம், இறப்பிற்கு பின்பும் இருப்போம்Sign in
பகவத்கீதை

பிறப்பிற்கு முன்பும் இருந்தோம், இறப்பிற்கு பின்பும் இருப்போம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“நீங்கள் நிலையான ஆத்மா,” என்று கிருஷ்ணர் சொல்லும்போது, இருப்பு நிலையில், நீங்கள் காலத்தைக் கடந்து இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். ஆனால் இப்பொழுது நீங்கள் கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஊசலாடிக்கொண்டேயிருக்கும் மனத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

கிருஷ்ணர் சொல்கிறார், “நீயும் நானும் இங்கிருக்கும் அரசர்கள் எல்லோரும் எல்லாக் காலத்திலும் இருந்தோம். நம்முடைய ஆத்மாவும் நம் உடலோடு சேர்ந்து இறந்து போய்விடும் என்று நினைப்பாயானால், அது தவறு.

நம் உடல் பிறப்பதற்கு முன்பும் நாம் இருந்தோம்; நம் உடல் இறந்த பிறகும் நாம் இருக்கப்போகிறோம். எதிர்காலத்தில் நம்மில் யாரும் இருக்கப் போவதில்லை என்று சொல்வதும் தவறு.

“நாம் எதிர்காலத்திலும் இருப்போம். காரணம் நம்முடைய ஆத்மாவுக்கு, சுய உணர்வுக்கு மரணம் கிடையாது. எதுவெல்லாம் இறக்கிறதோ அது வெல்லாம் எப்பொழுதும் வாழ்ந்ததில்லை. எதுவெல்லாம் வாழ்கிறதோ அதுவெல்லாம் எப்பொழுதும் இறப்பதில்லை.”

இங்கு உங்களுடைய ஆழமான விழிப்புணர்வு உங்களுக்குள் ஏதோ ஒன்று வாழ்வதாக சொல்கிறது. ஆனால் அந்தத் தன்மையை, குணத்தை நீங்கள் உடலுடனும் மனத்துடனும் சம்மந்தப்படுத்திக்கொள்கிறீர்கள். உங்கள் விழிப்புணர்வை உங்கள் உடல் என்றும் மனம் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

நீங்கள் உங்கள் உடல் கிடையாது; நீங்கள், மனம் கிடையாது. நீங்கள் எதிர்காலத்திலும் கடந்த காலத்திலும் கட்டுப்பட்டு இருக்கும்வரை நீங்கள் உங்களை உங்கள் உடல் என்றும், மனம் என்றும்தான் எண்ணிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் நிகழ்காலத்திற்கு வருகிற அந்தக் கணத்தில் நீங்கள் உங்கள் உடலையும் மனத்தையும் கடந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

எதுவெல்லாம்
இறக்கிறதோ
அதுவெல்லாம்
எப்பொழுதும்
வாழ்ந்ததில்லை.
எதுவெல்லாம்
வாழ்கிறதோ
அதுவெல்லாம்
எப்பொழுதும்
இறப்பதில்லை.

நாம் எல்லாக் காலத்திலும் இருக்கிறோம்
என்று கிருஷ்ணர் சொல்லும்போது, நாம்
இதே உடலில் இதே வடிவத்தில் என்றும்
இருந்திருக்கிறோம் என்று சொல்லவில்லை.
அதேபோல் கிருஷ்ணரும் அதே வடிவத்தில்
நாம் கற்பனை செய்து வைத்திருப்பதுபோல்
கையில் ஒரு புல்லாங்குழல், தலையில் மயில்
இறகோடு எல்லாக் காலங்களிலும் இருந்தார்
என்று அவர் சொல்லவில்லை.

நம்முடைய நிலையான ஆத்மா எல்லாக் காலங்களிலும் இருக்கும் என்று சொல்கிறார்.

ஆன்மீக உணர்வில் இருந்து பார்க்கும்போது, நாம் தெய்வீகமானவர்கள். ப்ரஹ்மம் எனப்படும் ப்ரபஞ்ச சக்தியில் நாம் ஒன்றாகக் கலந்து இருக்கிறோம்.

இரண்டாம் அத்தியாயத்தின் சாராம்சம் ‘நீங்கள் ஆத்மா, நீங்கள் தெய்வீகமானவர், நீங்கள் கடவுள்’ என்பதுதான்.

நிலையான ஆத்மா இந்த உடலில் வாழ்ந்தாலும் எப்படி இயற்கைக்குப் பல பருவங்கள் இருக்கிறதோ அதேபோல் இந்த உடல் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தரப் பருவம், முதுமைப் பருவம் என்று பல பருவங்களைக் கடந்து செல்கிறது. இறுதியில் மரணத்தையும் அனுபவிக்கிறது.

மீண்டும் ஆத்மா பிறக்கிறது. இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்கின்றன. மீண்டும் வசந்த காலத்தில் துளிர் விடுகின்றன. அதுபோல்தான் இறப்பும் பிறப்பும் இந்த உடலுக்கு நிகழ்கின்றன.

இயற்கையின் பல பருவங்களுக்கு மத்தியில் காலம் பயணிப்பதைப்போல் உடலின் பல பருவங்களுக்கு மத்தியில் ஆத்மா பயணிக்கிறது. குழந்தைப் பருவம், இளமைப் பருவம் மற்றும் நடுத்தர வயது வரும்பொழுது யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை, அவற்றில் உள்ள இன்பங்களை, மகிழ்ச்சியாக அனுபவித்து மகிழ்கிறார்கள். பின் ஏன் முதுமைப் பருவம் வரும்போது மட்டும் கவலைப்பட வேண்டும்? ஏன் மரணம் வரும்போது மட்டும் கவலைப்பட வேண்டும்?

> நீங்கள்,
> உங்கள் உடல்
> கிடையாது;
> நீங்கள்,
> உங்கள் மனம்
> கிடையாது.
> இந்த இரண்டையும்
> கடந்தவர்கள்.