விருப்பதைத் தேர்வு செய்யுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

யார் ஒருவர் நண்பரையும் பகைவரையும் சமமாகப் பாவிக்கிறாரோ, மரியாதை அவமரியாதை, வெப்பம் குளிர்ச்சி, இன்பம் துன்பம், புகழ்ச்சி இகழ்ச்சி இவற்றை யார் சமமாக ஏற்றுக்கொள்கிறாரோ, யார் எப்போதும் பற்றற்ற தன்மையுடன், எப்போதும் மௌனமாக இருந்து எதிலும் திருப்தியடைந்து, தமக்கென்று ஒரு நிரந்தர வீடில்லாமல் மனத்தில் நிலைகொண்டு, என்னிடம் பக்தியுடன் இருக்கிறாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்.
ஒருவர் என்னையே உயர்ந்த இலட்சியமாகக்கொண்டு மிக்க நம்பிக்கையுடன், அழிவில்லாத இந்த தர்ம பாதையை உண்மையுடன் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
இருப்புத் தன்மையே உங்கள் சொந்த வீடு!
மீண்டும் கிருஷ்ணர், "முழுதும் பக்தியால் நிரம்பியவர் எனக்குப் பிரியமானவர்," என்று சொல்கிறார். அவர் இதற்கு மேல் எந்த விதிகளையும் சொல்லத் தயாராக இல்லை. அதாவது அவர் தம்முடைய விதிமுறைகளை முடித்துக்கொள்ளும் தருணத்தில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
அவர் ஏறக்குறைய, "இதுதான் பாதை, யாராவது இதை விரும்பினால், நான் அவர்களை நேசிக்கிறேன். அவ்வளவுதான். எனக்கு வேறு எதிலும் விருப்பம் இல்லை," என்று சொல்லி முடித்து விடுகிறார்.
"யார் ஒருவர் நண்பர் மற்றும் பகைவர்களிடத்தில் பேதமின்றி இருக்கிறாரோ, யார் ஒருவர் மரியாதை மற்றும் அவமரியாதையில், வெப்பம் மற்றும் குளிரில், இன்பம் மற்றும் துன்பத்தில் ஒரே மாதிரியாக இருக்கிறாரோ, செயலின் பலன் மீது பந்தம்கொள்ளாமல் இருக்கிறாரோ, புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமமாக இருக்கிறாரோ, யார் எண்ணங்கள்-இல்லா நிலையில் இருக்கிறாரோ, யார் ஒருவர் கிடைத்தவற்றில் திருப்தியுடன் இருக்கிறாரோ, எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல் மனத்தில் நிலைகொண்டு பக்தியால் நிரம்பியுள்ளாரோ அந்த மனிதர் எனக்கு மிகவும் பிரியமானவர்."
இங்கே ஓர் அழகான சொற்றொடர் சொல்லப்பட்டுள்ளது, "யார் எந்த வீட்டைப் பற்றியும் கவலைப்படாமல், தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று கவலைகொள்ளாமல்..."
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். இராவணன் ஒரு கல்ப காலம் வாழ்ந்தான். ஒரு கல்பம் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்தது. வியாஸர் நான்கு கல்ப காலம் வாழ்ந்தார்.
இராவணன் தம்முடைய தலைநகரமான
இலங்காபுரியைக் கட்டிக்கொண்டு இருந்தான்.
அவன் சிவனிடமிருந்து இலங்காபுரியைப்
பரிசாகப் பெற்று அதை மேன்மையாக்கிக்
கொண்டிருந்தான்.
வியாஸர் அந்த நகரத்திற்கு வந்தபொழுது, "ஓ
வியாஸரே, என்னுடைய அரண்மனையையும்
நகரத்தையும் பார்த்தீர்களா? எவ்வளவு
பிரம்மாண்டமாக விளங்குகின்றன,'' என்று இராவணன் கேட்டான்.
வியாஸர் பதில் சொன்னார், "ஆமாம். நான் அவற்றைப் பார்த்தேன்."
இராவணன் வியாஸருக்கு அனைத்தையும்
பெருமையுடன் காட்டிக்கொண்டே ,
"நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டைக்
கட்டக்கூடாது ?" என்று கேட்டான்.
வியாஸர் புன்னகைத்துக்கொண்டே , "என்னுடைய வாழ்க்கை வெறும் நான்கு கல்ப காலம்வரையில்தான். வீடுகளைக் கட்டுவதில் வீணடிக்கிற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. நான் வெறும் நான்கு கல்ப காலம்வரைதான் வாழப் போவதால் நான் வீடுகளைக் கட்டி என்னுடைய நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்?" என்று கேட்டார்.
இராவணன் வெறும் ஒரு கல்ப காலம்தான் வாழ்ந்தபோதும் மிகப்பெரிய வீட்டைக் கட்டினான். வியாஸர் நான்கு கல்ப காலம் வாழ்ந்தபோதும் வீடுகளைக் கட்டி தம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை வீணடிப்பது தேவையற்றது என்று எண்ணினார்!

"யார் தமக்கென்று ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைக்காமல் இருக்கிறாரோ அவர் பக்தியால் நிரம்பி இருக்கிறார். அவர் எனக்கு நெருக்கமானவர், பிரியமானவர். யார் ஒருவர் தர்ம பாதையில் வாழ்கிறாரோ அவரே என்னிடம் பக்தி கொண்டவர்," என்று சொல்லி, பக்தி யோகம் என்கிற இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்