KAILASA Library/பகவத் கீதை/பகவத்கீதைSign in
பகவத் கீதை

பகவத்கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு பின்னணி

உங்களை ஞானியாக்கும் அனுபவத்தின் வெளிப்பாடு

நமது உன்னதமான வேத பாரம்பரியத்தின் புனித நூல்களுள் ஒன்று பகவத்கீதை. ஏனைய சமய நூல்களைப் போன்றே, பகவத்கீதையிலும் அனுபவ அறிவானது வாய்மொழியாகவே நேரிடையாகத் தரப்பட்டுள்ளது. இதை ஸம்ஸ்க்ருதத்தில் ச்‘ருதி (Sruti) என்பார்கள். ச்‘ருதி என்றால் ‘காதால் கேட்பது’ என்று பொருள்.

பகவத்கீதையைப் பொதுவாக ‘கீதை’ என்றே சொல்லுவோம். கீதை என்றால் ஸம்ஸ்க்ருதத்தில் ‘புனிதப் பாடல்’ என்று பொருள். வேதங்களும் உபநிஷதங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அனுபவ வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் கீதை, ஹிந்து மத இதிஹாஸ கதையான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மஹாபாரதக் கதையின் ஒரு பகுதி கீதை என்றும் சொல்லலாம்.

வேத பாரம்பரியத்திற்கே ஆதாரமாக விளங்குகிற மேன்மையான தத்துவ ஞானிகளினுடைய அனுபவ வெளிப்பாடுகளாக விளங்கும் புனிதமான ஞானக்கருத்துக்களின் ஒரு பகுதியாக கீதை இருக்கிறது.

புனித நூலான ச்‘ருதியின் அஸ்திவாரங்களாக விளங்கும் வேதங்களும் உபநிஷதங்களும், நம்முடைய ஞானிகளும், ரிஷிகளும் மனமற்ற நிலைக்குச் சென்றபொழுது, உள்முகப் பார்வையில், முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து வெளிப்படுத்தியவையே!

இவை, மனிதகுலம் எவ்வளவு பழமைவாய்ந்ததோ அவ்வளவு பழமையானது. ஸத்யத்தைத் தேட ஆரம்பித்த மனிதனின் பயணத்தில் வெளிப்பட்ட முதன்மையான ஸத்ய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பிரபஞ்சசக்தியால் முதலில் ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட வேதங்களைப் போன்றோ அல்லது அவர்களால் மனிதகுலத்திற்குப் போதிக்கப்பட்ட உபநிஷதங்களைப் போன்றோ இல்லாமல், கீதை, ஞானிகளுள் ஒருவரான வியாஸ முனிவரால் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட மஹாபாரதக் கதையின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது தெய்வத்திடமிருந்து நேரடியாக எப்படி வெளிப்பட்டதோ அப்படியே, தெய்வத்தின் நேரடி வெளிப்பாடாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.

கீதை பெற்றிருப்பதைப் போன்ற ஒரு சிறப்பு நிலையை வேறு எந்த இதிஹாஸமோ அல்லது இதிஹாஸத்தின் பகுதியோ இதுவரை பெறவில்லை. கீதை இருப்பதால்தான், மஹாபாரதமேகூட ஹிந்துக்களின் புனித நூலாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் என்ற மேலான, உயர்ந்த கடவுளின் விழிப்புணர்வு நிலையில் இருந்து தோன்றியது கீதை. அதனால்தான் அது எல்லோராலும் புனித நூலாகக் கருதப்படுகிறது.

மஹாபாரதத்தின் கதைச் சுருக்கம்

Map of India

'மஹாபாரதம்' என்றால் மிகச்சிறந்த பாரதம் என்று பொருள். தற்பொழுது 'இந்தியா' என்று அறியப்படுகிற, அப்போதைய பாரத நாட்டைப் பற்றியும் அப்பொழுது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தைப் பற்றியும் மஹாபாரதம் விவரிக்கிறது. பரதன் என்கிற மன்னராலும் அவரது வம்சாவளியினராலும் அப்பொழுது ஆளப்பட்ட தேசம் பாரதம். இந்த இதிஹாஸம், கெளரவர்கள், பாண்டவர்கள் என்ற இரண்டு நெருங்கிய உறவுமுறை குடும்பங்களுக்கு இடையே நிகழும் சண்டை சச்சரவுகளைப் பற்றிச் சொல்கிறது.

ஹஸ்தினாபுரத்தின் அரசர் திருதராஷ்டிரர், பார்வையற்றவர். அவருக்குக் கெளரவர்கள் என்ற நூறு பிள்ளைகள் இருந்தார்கள். அவரது தம்பி பாண்டு. அவருக்குப் பாண்டவர்கள் என்ற ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். தந்தை வழி சகோதரர்களான இவர்களுக்குள் நிகழும் போட்டி, பூசல், ஒற்றுமையின்மையைப் பற்றிச் சொல்கிறது.

திருதராஷ்டிரர் பார்வை அற்றவராக இருந்ததால் அவரது தம்பி பாண்டு, அரசராக முடிசூட்டப்பட்டார். பாண்டு தம் மனைவியருடன் உறவு கொண்டால் இறந்துவிடுவார் என்று ஒரு முனிவர் சாபமிட்டிருந்தார். அதனால் அவருக்குக் குழந்தை இல்லை.

பாண்டவர்கள் ஐவரும் அவர்களது அன்னை குந்திக்கும் மாத்ரிக்கும் தெய்வ அருளால் பிறந்ததாக வியாஸ முனிவர் விவரிக்கிறார்.

பாண்டு, தமது அரசை பார்வையற்ற தமது அண்ணன் திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துவிட்டு, தவம் செய்ய காட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

அதற்கு முன், கதைக்குள் ஒரு சின்ன கதை,

குந்தி, தமது இளமைப் பருவத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு வரம் பெற்றிருந்தார். அதன்படி அவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்து எந்தத் தெய்வ சக்தியை வழிபடுகிறாரோ அந்தத் தெய்வ சக்தியின் அருளால் குழந்தை பாக்கியம் பெற முடியும்.

இளம் பருவத்தில் திருமணத்திற்கு முன் அந்த வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் குந்தி. சூரிய தேவனை வேண்டி, அந்த மந்திரத்தை உச்சரித்து, வரத்தைச் சோதனைசெய்து பார்த்தபொழுது சூரிய தேவன் தோன்றினார். அவருடைய அருளால் குந்திக்குப் பிறந்தவர்தான் கர்ணன். ஆனால் சமுதாயக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் நதியில் விட்டுவிட்டார் குந்தி.

திருமணத்திற்குப் பிறகு பாண்டுவின் சம்மதத்துடன் அதே வரத்தின் அருளால் யுதிஷ்டிரர், பீமன், அர்ச்சுனன் ஆகிய மூவரும் குந்திக்குப் பிறந்தார்கள். அதே வரத்தின் அருளாலேயே, பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரிக்கு இரட்டையர்களான நகுலனும், ஸஹதேவனும் பிறந்தார்கள்.

யுதிஷ்டிரர், தர்மத்திற்கும் மரணத்திற்கும் அதிபதியான யமராஜனின் ஆசிர்வதித்ததால் பிறந்தார். காற்றுக்கு அதிபதியான வாயு பகவானால் பீமனும் தேவர்களுக்கு அதிபதியான இந்திரனின் அருளால் அர்ஜுனனும் பிறந்தார்கள். அஸ்வினி குமாரர்களின் அருளால் மாத்ரிக்கு நகுலனும் ஸஹதேவனும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார்கள்.

திருதராஷ்டிரருக்கு அவரது மனைவி காந்தாரி மூலமாக நூறு பிள்ளைகள் (கௌரவர்கள்) பிறந்தார்கள். கௌரவ இளவரசர்களில் மூத்தவர் பெயர் துரியோதனன். துரியோதனனுக்கு தமது ஒன்றுவிட்ட சகோதரர்களான பாண்டவர்கள் மீது சிறிதும் அன்பில்லை.

தனது தம்பி துச்சாதனனுடன் சேர்ந்து பாண்டவர்களை அழிக்கப் பலமுறை முயற்சி செய்தார் துரியோதனன். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை. நதியில் விடப்பட்ட குந்தியின் முதல் மகனான கர்ணன், அரண்மனைத் தேரோட்டியால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வந்தார். விதியின் வினோத விளையாட்டினால் கர்ணன் துரியோதனனுடன் இணைந்தார்.

பாண்டு விட்டுக் கொடுத்த அரசாட்சி என்பதாலும், பாண்டவ இளவரசரான யுதிஷ்டிரரே உரிய வாரிசு என்பதாலும், யுதிஷ்டிரர் உரிய வயதை அடைந்ததும் திருதராஷ்டிரர் அவருக்குச் சரி பாதி தேசத்தைக் கொடுத்தார். யுதிஷ்டிரர் இந்திரப்பிரஸ்தத்தைத் தலைநகராக நிறுவி, தனது தம்பியர்களான பீமன், அர்ஜூனன், நகுலன், ஸஹதேவனுடன் ஆண்டு வந்தார்.

அர்ஜூனன் பாஞ்சால தேசத்து இளவரசி திரௌபதியை சுயம்வரத்தில் வென்று மணம் புரிந்தார். (ஸ்வயம்வரம் என்பது ஒரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்து கொள்வதற்காக பல நாட்டின் இளவரசர்களிடையே நடக்கும் போட்டி) திரௌபதியை சுயம்வரத்தில் வென்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தனது வீட்டிற்குள் நுழையும்பொழுது, தனது அம்மா குந்தியிடம், வீட்டுவாசலில் இருந்தவாறே, "அம்மா நான் ஒரு பொருளை பரிசாக இன்று கொண்டுவந்திருக்கிறேன்" என்று சொன்னார். அப்பொழுது குந்தி தனது மகன் அர்ஜூனனிடம், "நீ எந்தப் பொருளைக் கொண்டு வந்திருந்தாலும் அண்ணன் தம்பி ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்," என்று அந்தப் பரிசுப்பொருள் என்னவென்று பார்க்காமலேயே கட்டளையிட்டார். 'எது கிடைத்தாலும் ஐவரும் சமமாகப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என்ற அன்னை குந்தியின் வாக்கை அவர்கள் நிறைவேற்ற மற்ற நால்வரும் திரௌபதியை மணம் புரிந்தார்கள். நாட்டை ஆண்டு வந்தார்கள்.

அப்பொழுது துரியோதனன், யுதிஷ்டிரரைச் சூதாட்டத்திற்கு இணங்க வைத்தார். அதில் அவரது மாமா சகுனி வஞ்சகமாகப் பாண்டவர்களைத் தோற்கடித்தார். ஆட்டத்தில் யுதிஷ்டிரர், அவரது நாடு, தம்பிகள், மனைவி என அனைத்தையும் இழந்தார். ஏன் தம்மையே துரியோதனனிடம் அந்தச் சூதாட்டத்தில் இழந்தார்.

துரியோதனனின் தம்பி துச்சாதனன், எல்லோர் முன்னிலையிலும் திரௌபதியைத் துகிலுரித்து மானபங்கப்படுத்த முயற்சி செய்தார். பிறகு துரியோதனன், பாண்டவர்களும் திரௌபதியும் பதினான்கு ஆண்டு களுக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். அதில் பதினான்காவது ஆண்டு பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ வேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதித்தார்.