Chapter 21

வசை பாராட்டு

1 sections

வசை பாராட்டு

'கேட்டுங் கிடைக்கவில்லை பாராட்டு. கேட்காமலேயே கிடைத்தது திட்டு. எதிர்பாரா சமயம் கிடைத்த பாராட்டும் எதையோ எதிர்பார்க்கே உதிர்ந்தது திருட்டுத்தனமாய்! என்னவொரு கேவலச் சமுதாயமிது ? - என அவலத்தை அரற்றியவனிடம் – குரு 'உன்னை விடவா கேவலமானது சமுதாயம் ?' வருடும் பதிலை எதிர்பார்த்தவன் திடுக்கிட்டான். 'உன்னை விடப் பெரிய திருடன் எங்கே இருக்கிறான் காட்டேன்...' மீண்டும் கேட்டார் குரு. அம்பென வந்த முதல் கேள்வியையேயே கிரகிக்க முடியா நிலையில் கதாயுதமாக வந்து தாக்கிய இரண்டாவது கேள்வியில் குரு முகம் பார்க்க தைரியமில்லாததால் கிறங்கிப் போய் நிலம் பார்த்தான் இடைவெளிவிடாது தொடர்ந்த குரு 'தெரிந்து கொள்ளப்பா எப்போதுமே பாராட்டு பாழாக்கும். திட்டு திடப்படுத்தும்.

மிகைப்படுத்தப்பட்ட சரிகள் பாராட்டுகள் !

மிகைப்படுத்தப்பட்ட தவறுகள் திட்டுகள் !

தொடர்ந்து பாராட்டப்பட, பாழாய்ப்போன மனம் பறக்க ஆரம்பித்து விடும் – பிண் மறக்க ஆரம்பித்து விடும் தன் குறைகளை!

விளைவு – கொடிது ! குறை மாசக் குழந்தையாய்ச் சூம்பிப் போய் விடும் மனித குணம் !

தொடர்ந்து திட்டப்பட பாழாய்ப் போய்விட்ட மனம் ஏன் இவ்வளவு திட்டுகள் ? – எனத் தன்னையே திரும்பிப் பார்க்குங்கால் தெரிய ஆரம்பிக்கும் - உள்ளிருக்கும் தன் குறைகள்.

கேவலமும் திருட்டுத்தனமும் செறிவு மிகுந்திருக்கிறது வெளியில் இருப்பதைவிட உள்ளே.

அதனால்தான் எதிர்பார்க்கிறாய் பாராட்டை. எதிர்பார்க்கவேயில்லை திட்டுகளை !

நீ தலைகீழாய் இருப்பதால் தலைகீழாய்த் தெரிகிறது சமுதாயம்.

பாராட்டுகளை எதிர்பார்க்காதே பாராட்டாதே

வசைகளை எதிர்பார், பாராட்டு இரண்டில் ஒன்று செய் வளர்வாய் ! '

எனக் கூறி முடித்தார்.