V ஞானம் அடைதல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
1. மஹா அவதார் ஸ்ரீ பாபாஜியோடு
இப்படியாக, தேடுதல் என்னும் தீ அவரை இமயமலை வரை அழைத்துச் சென்று விட்டது. அங்கே கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமேற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தை ஜடாதாரியான, கட்டுடலும், நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையைப் பிரதிபலிக்கும் முக அமைப்பும் பாவமும் கொண்டவராக ஒரு மனிதர் கடந்து சென்றார். அவரது இளமை மிளிரும் உடலும், நடையும்; வெளிப்பட்ட தெய்வீகத் தன்மையும் நமது சுவாமிகளை "இவர் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய மகானாகத்தான் இருக்க வேண்டும்" என்று உணரவைத்தது.
அந்த மனிதர் சுவாமிகளை தாண்டும் போது "பரமஹம்ஸ... நித்யானந்த..." என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தாடியோடு வந்த ஒரு வயதானவர் சுவாமிகளைப் பார்த்து, "நீங்கள் பாபாஜியை சந்தித்தீர்களா?" என்று கேட்டார். (தன்னைக் கடந்தது மகா அவதார் பாபாஜி என்ற விஷயம் சுவாமிக்கு அப்போது தெரியாது)
"பாபாஜியா! யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே" என்றார் சுவாமிகள்.
"இல்லை இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. நான் பாபாஜியின் சீடன்" என்றார்.
பாபாஜி உதிர்த்த "பரமஹம்ஸ ... நித்யானந்த" என்ற வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று அப்போது அவரால் உணர முடியவில்லை. பின்னர் சுவாமிகள் சந்நியாசம் பெற்றுக் கொள்ளும் போது அவருக்கு நித்யானந்த என்று பெயர் அருளப்பட்டபோது பாபாஜியை நினைத்து ஆச்சர்யப்பட்டார், பரவசம் அடைந்தார்.
2. ஓம்காரீஸ்வரர் மலையில்
இப்படி ஞானத் தேடுதலில் பல மலைகளில் அவர் அனுபவங்களை பெற்றிருந்தாலும் ஜன நடமாட்டமே இல்லாத ஓம்காரீஸ்வரர் மலையில் ஏற்பட்ட அனுபவம் குறிப்பிடத்தக்கது. அந்த மலையில் இயற்கையிலேயே தியானம் செய்ய வசதியாக உட்காரும் வகையில் சிறு பிளவோடுகூடிய ஒரு பாறை இருந்தது. வெகுநேரம் அந்தப் பாறையில் அமர்ந்தபடியே தியானம் செய்வார். ஒரு நாள் சாயங்கால வேளையில் ஜன நடமாட்டமே இல்லாத அந்த மலைப் பகுதியில் தூரத்தில் மரத்தடியில் யாரோ ஒருவர் வருவது போல் தெரியவே ஆச்சரியம் தாளாமல் யார் அது என்று பார்க்க அந்த நபரை நோக்கி ஓடினார்.
அருகே சென்ற பிறகு அது மனிதன் இல்லை கரடி என்று தெரியவே சற்று திகைத்தார். என்ன செய்வது என்று தெரியாததால் வெறுமனே அமைதியாக அந்தக் கரடியைப் பார்த்தார். இவ்வளவு அருகே வந்தபின் தப்பிக்க முடியாது- எனவே என்ன நடக்கிறதோ நடக்கட்டும் என்று அமைதியோடு கரடியைப் பார்த்தார். சில நொடிகள் கரடியும் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து விட்டு, வலதும், இடதுமாக உடலை ஆட்டித் திரும்பிச் சென்று விட்டது, அமைதியாக.
3. பஞ்ச தபஸ்
ஞானப் பாதையில் பல தபஸ்களைச் செய்து வந்தார். அதில் ஒன்று பஞ்சதபஸ். விழிப்புணர்வை அதிகப்படுத்த தன்னைச் சுற்றித் தீயை எரியச் செய்து, தலையில் ஒரு தீச் சட்டியை வைத்துக் கொண்டு, தீ அணையாமல் இருக்கச் சில சிறுவர்களை அமர்த்திவிட்டுக் காலையில் இருந்து மாலை வரை செய்வார். இதுபோன்ற மிகக் கடினமான தபஸ்களை ஏன் செய்கிறீர்கள் என்று சிலர் கேட்டதற்கு, "வெளியில் உள்ள தீ சுடுவதை விட, என்னுள் இருக்கும் தீ சுடுவதை என்னால் பொறுக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி" என்று சாதாரணமாகப் பதில் அளித்து விட்டார்.
4. எலும்பு முறிவும் அதிசய குணமும்
தபோவனிலிருந்து திரும்பும் பொழுது சுவாமிகள் ஒரு ராணுவ வாகனத்தில் பயணம் செய்தார். அதில் வசதியாக உட்காருவதற்கான இருக்கைகளுக்கு பதிலாக மரப் பலகைகளே இருந்தன. திடீரென எதிர்பாராத ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியதில் வாகனம் கொஞ்சம் தடுமாறியது. சுவாமிகளின் இடுப்பெலும்பில் ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டது போன்ற உணர்வும், வலியும் தெரிந்தது. அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த மருத்துவர் மாவுக்கட்டு போட்டு விடுவதாகக் கூறினார். சுவாமிகள் அதை ஏற்கவில்லை. உள்ளங்கையால் தடவிவிட்டபடியே எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.

ஹரித்வார் சென்றதும் ஒரு மருத்துவமனையில் Radiograph எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த மருத்துவர் திகைத்துப் போனார். எலும்பு முறிவு இருந்தும், சுவாமிகள் எதுவும் நடக்காதது போல் இயல்பாக வலி யில்லாமல் இருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார். சுவாமிகள் முதன் முதலில் தனக்கே Healing செய்து கொண்டு, இன்று அதை உலக மக்கள் பலருக்கும் ஒரு பெரும் சேவையாகச் செய்து வருகிறார்.
5. மரண பயத்தை வெல்லுதல்
தேடுதல் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. தவம், தியானம் என்றே 24 மணி நேரமும் வாழ்ந்து வந்தார். பயணம் திடீர் திடீர் என்று மாறிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று கடைசியில் காசியில் வந்து நின்றது.
காசியில் மணிகர்னிகாகாட் என்ற இடத்தில் நூற்றுக் கணக்கான பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் ஸ்வாமிகளின் மனதில் ஒரு உத்வேகம் தோன்றியது. "மரண ரகசியம் பற்றித் தெரிந்து கொள்ளாமல், உணராமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை" என்று உறுதி பூண்டார். மரண பயத்தை வெல்ல இரண்டரை நாட்கள் மௌன நிலையில் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த நாட்களில் அவரது உடல் காலில் இருந்து மெல்ல மெல்ல இறக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக மரண பயம் தெளிந்தது. முழு மௌன நிலையில் முழு விழிப்புணர்வோடு இருந்ததால் அந்த பயத்தை இரண்டரை நாட்களில் தாண்டிவிட்டார். அதற்குப் பின் பயம் என்பது ஏற்பட்டதே இல்லை.
6. ஞானம் அடைதல்
மரண பயத்தைத் தாண்டிய அனுபவத்தோடு அவர் மீண்டும் தெற்கு நோக்கிப் பயணம் செய்தார்.
ஆழ்ந்த தவம், ஆழ்ந்த தியானம், அநேக தபஸ் ஆகியவற்றில் தூய்மை அடைந்த உடலையும்; தனிமை, வெறுமை, பசி, பட்டினி, 100 சதவிகிதம் பாதுகாப்பில்லாத வாழ்க்கை, ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒரு கட்டுப் பாட்டிற்குள் வந்துவிட்ட மனத்தையும் உடலையும் விட்டு வெளியேறிய அனுபவம், இயற்கையோடு வாழ்ந்த அனுபவங்கள், தரிசனங்கள், மரண பயத்தைத் தாண்டிய அனுபவங்கள் ஆகியவற்றால் சில துளிகள் ஆத்மாவின் ஆனந்த நிலையைப் பற்றிய அனுபவங்களோடு - சுவாமிகளின் ஆன்மீகப் பயணம் பூரண ஞானத்தை நோக்கி மேலும் மேலும் செல்லத் துவங்கியது.
தியானத்தின் உச்சம் நோக்கி மனமும் உடலும், பக்குவப்பட ஆரம்பித்தது. அதன் பிறகும் கூட வாழ்க்கையில் ஞான அனுபவம் கிடைக்கவில்லை. ஞானப் பாதை வெற்றி தவறிக் கொண்டே போவது போல் தோன்றியது.
தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்த பின்பு ஞான அனுபவம் "ஏன் தள்ளிப் போகிறது?" என்று ஒரு மாதிரியான குழப்பம் ஏற்பட்டது. ஞான அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே ஒரு கட்டத்தில் ஆட்டம் கண்டது.
கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்தையே அடைந்து விட்டார். ஞானம் பற்றிய போதனைகள் எல்லாம் பிரமையோ, இல்லை தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்ட பொய்களோ என்று எண்ணும் அளவுக்கு விரக்தி அவரை ஆட்கொண்டது.
"வாழ்க்கையின் ஏமாற்றங்களால் நான் தோற்கடிக்கப் படமாட்டேன்" என்று அவரது ஸ்திரமான மனஉறுதியும் குலைந்தது. தன் இலக்கினை எட்ட எவ்வளவு தீவிரமாக முயன்றாரோ அந்த அளவுக்கு இலக்கு அவரை விட்டு விலகிச் செல்வதைத் தெளிவாக உணர்ந்தார்.
"இனிமேலும் இப்படித் தீவிரமாக முயற்சிப்பதில் என்ன பயன்" என்று "இனி எல்லாத் தேடுதல் முயற்சிகளையும் கை விட்டு விடலாம்" என்ற முடிவோடு முழு விரக்தியில் செய்வதறியாது அப்படியே, அமைதியாகி விட்டார்.
அந்த விரக்தி வந்து சரியாக ஏழாம் நாள் பூரண ஞான அனுபவம் கிடைத்தது. சுவாமிகள் ஞான அனுபவம் பற்றி விளக்கும் போது சொன்னார், "திடீரென்று, சற்றும் எதிர்பாராத தருணத்தில், எனக்குள் ஒரு ஆனந்தமான சக்தி பெருகியதை உணர்ந்தேன்.
ஆனந்தமயமான உணர்வு அதிகமாகிக் கொண்டே சென்றது. நான் உணர்ந்து அனுபவித்த ஆனந்தக் கடலில் நான் கரைவதைத் தெளிவாக உணர்ந்தே நான் மறைந்து, தான் என்ற தெய்வீக உணர்வு வெளிப்பட்டது. காலம், நேரம்; உடல், மனம்; இடம், பொருள் தாண்டி 'தானே எல்லாவாகவும், எப்போதுமாகவும் இருத்தல்' போன்ற உணர்வையும், அனுபவத்தையும் பெற்றேன்."
"என் பலவருடக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தது, பிரபஞ்ச உண்மைகள் தெளிவாகப் புரிந்தன. ஆனந்த அனுபவத்தை இதற்கு மேல் விளக்க வார்த்தைகள் இல்லை" என்றார். அதன்பின் அந்த ஆனந்த சுகத்திலேயே, தெய்வீக நிலையிலேயே நான் என்று தனி உணர்வற்ற, பொது உணர்விலேயே கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கழித்தார்.
மீண்டும் ஆனந்தப் பெருக்கில் ஆனந்தமாக முழுமையாக இருந்தபோது தமிழ்நாடு வரை வந்து, பிறகு மகாராஷ்டிரவுக்குச் சென்றார்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மனதிலிருந்து வார்த்தை வர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருந்த சக்தி அதிகமாகிக் கொண்டே வந்தது. "ஆனந்தமாக இருங்கள்" என்ற முதல் வார்த்தைகள் வந்தன.
பின்பு தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய்களைக் குணப்படுத்தினார். ஆன்மீக அற்புதங்களையும், போதனைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்தார். பிறகு இறைசக்தியின் சித்தப்படி பெங்களூரில் தியானபீடம் என்ற ஆசிரமத்தை உருவாக்கினார்.
ஒரு முறை சேலம் பக்தர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஆர்வம் மேலிட, "சுவாமி, நீங்கள் எங்களுக்கு ஏதாவது ஒரு அதிசயத்தைச் செய்து காட்டுங்கள்" என்று வேண்டி னார்கள். சுவாமிகள், "அதிசயம் என்பது செய்வது கிடையாது, அதிசயம் என்பது தானாக நடப்பது." "நீங்கள் அதிசயம் என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் சித்து வேலைகளே. உண்மையான அதிசயம் எப்போதுமே தானாகவே நடந்தேறும்" என்று அதிசயம் பற்றிய ஆன்மீக உண்மையை விளக்கி விட்டு, ஒரே சொடக்கில் வெறும் கையில் இருந்து ஒரு லஷ்மி விக்ரகத்தை வரவழைத்துக் கொடுத்தார்.
"ஆஹா... என்ன அதிசயம், என்ன ஆச்சரியம்!" என்று வியந்தனர். சுவாமிகள், "மீண்டும் சொல்கிறேன், இது அதிசயம் அல்ல. இது சாதாரண சித்து வேலைதான், இதனால் உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை" - என்று ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சாதாரணமாக விளக்கினார்.
VI உலக மக்களுக்கு ஆன்மீகப் பணியில்
தான் பெற்ற அந்த ஞான அனுபவத்தையும், ஆனந்தத்தையும், வாழ்க்கைத் தெளிவையும் இன்னல்களில் சிக்கித் தவிக்கும் மானிட குலத்திற்குச் சேவை செய்ய இறைசக்தியின் வழிகாட்டுதல் என்று தன்னை ஆன்மீகப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டார்.
இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மேல் சுவாமிகளிடமிருந்து ஆன்மீகத் தொடுதலையும், ஆன்மீகக் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார்கள். பத்தாயிரம் பேருக்கு மேல் நோயாளிகள் சுவாமிகளால் தொடப்பட்டு குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பணிகளையும் தியானபீடம் என்ற ஆசிரமத்தின் மூலம் செய்து வருகிறார். தியானபீடம் எனும் ஆன்மீக மையம் பெங்களூரில் இருக்கிறது. இந்த ஆசிரமம் அமைந்ததே ஓர் அதிசயம்தான்.
1. சுவாமிகளின் தரிசனம்
தமிழ்நாட்டில் ஆசிரமம் அமைக்கக் கோரி பக்தர் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த நிலத்தில் காலடி வைத்த கணத்தில் சுவாமிக்குத் தரிசனம் கிடைத்தது. அதில் பெரிய ஆலமரத்தோடு கூடிய நிலம் ஒன்று பெங்களூரில் இருப்பதாகவும், அதுதான் தலைமையகமாக அமையும் என்றும் தெரிந்ததாகச் சுவாமிகள் கூறினார்.
சில நாட்கள் கழித்து பெங்களூரில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, அன்பர் ஒருவர் தட்சணாமூர்த்தியைத் தான் தரிசனத்தில் கண்டதாகவும், அவர் நிலத்தை தானமாகக் கொடுக்கச் சொல்லிப் பணித்ததாகவும் கூறினார்.
சுவாமிகள், "என்னப்பா உண்மையா என்னைத் தான் தரிசனத்தில் பார்த்தாயா? இது விளையாட்டு விஷயமல்ல. ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலம்." அன்பர் “இல்லை சுவாமிஜி உங்களை நேரில் பார்க்கும் முன்பே நான் இந்த தரிசனத்தைக் கண்டுவிட்டேன். எனக்கு உறுதியாகத் தெரியும் அது சாக்ஷாத் நீங்கள்தான்” என்று கூறி ஆசிரமத்திற்கான நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். பார்வையிடுவதற்காக அந்த நிலத்திற்கு சுவாமிகள் வந்தபோது தரிசனத்தில் தான் பார்த்த அதே ஆலமரம் அங்கே இருப்பதைப் பார்த்தார். வியந்து போனார்!
2. ஆசிரமத்தில் நிகழ்ந்த முதல் அதிசயம்
ஒருமுறை ஆசிரம நிலத்தைச் சுற்றிப் பார்வை யிடுவதற்காக சுவாமிகள் வந்திருந்தார். அங்கே மக்கள் கூடி நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குழியில் நிறை கர்ப்பமாக இருக்கும் பசு மாடு ஒன்று விழுந்து விட்டது. அதைக் காப்பற்று வதற்காக கயிறுகளை அங்கும் இங்குமாகப் போட்டு மேலே சிலர் இழுக்க, சுற்றி இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரட்சியில் மாடு ஒரு கட்டுப்பாடே இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது.
சுவாமிகள் இந்த முழு நிலைமையையும் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டே வந்தார்கள். முதலில் மாட்டைச் சுற்றியிருக்கும் கயிறுகளை அகற்றக் கட்டளையிட்டார். பின் சுற்றி நின்று கொண்டிருந்த வர்களைக் கொஞ்சம் விலகி நிற்கச் சொல்லிவிட்டுப் பசுவின் கண்களை நேருக்குநேர் பார்த்து "வெளியே வா" என்ற ஒரே ஒரு மனக்கட்டளையைப் பிறப்பித்து விட்டு "பசு தானாக வெளியே வந்துவிடும்" என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்.
என்ன ஆச்சரியம்! அந்தப் பசு தானாகவே குழியில் இருந்து வெளியேறி விட்டது.
இது எப்படிச் சாத்தியம் சுவாமிஜி என்று உடனிருந்தோர் வினவ_
"அதனுடைய இயற்கையான ஞான சக்தியை வெளிப்படுத்த உதவினேன். அவ்வளவே" என்றார்.
3. ஆசிரமம்
தியானபீடம் ஆசிரமம் மற்றும் தியான சிகிச்சை மையம் 2003 ஜனவரி 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்குள் ஆசிரமம் வளர்ந்திருப்பதைப் பார்த்தால் - இது முழுக்க முழுக்க இறை சக்தியின் நடத்துதல் என்று உணர முடியும். உலகம் முழுவதும் இன்று நூறு தியான சிகிச்சை மையங்கள் உள்ளன.
இதுவரை 200 'தியான சிகிச்சை அளிக்கும் யோகிகள் ஆசிரமத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் தியான சிகிச்சையால் குணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் சுவாமியின் மூலம் ஆன்மீக அனுபவத்தையும், ஆன்மீகத் தொடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.
குமுதம் வார இதழில், "கதவைத் திற, காற்று வரட்டும்" என்ற தொடரின் மூலமாகவும், பல்வேறு எழுத்துக்கள் மூலமாக ஒரு கோடிக்கு மேலான மக்களின் இதயத்தைச் சுவாமிகள் தொட்டிருக்கிறார்கள்.