85. வேண்டாம்பா இந்த வம்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சியாட்டில் தியானக் கருத்தரங்கில், ஒரு அமெரிக்கத் தம்பதியினர் தங்கள் மகனை என்னிடம் அழைத்து வந்தார்கள்.
தம்பதியினர், "இவன் எங்களின் சொல்பேச்சைக் கேட்பதே யில்லை. அதையும் தாண்டி உறவினர்கள் ஏதாவது அறிவுரை சொன்னால், அவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துவிட்டு, எங்களிடம் கண்சிமிட்டுகிறான்.
என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் இவன் என்பது எங்களுக்குப் புரியவேயில்லை. இதற்கு என்ன தீர்வு" எனக் கேட்டார்கள்.
அந்தச் சிறுவனிடம் தனியாகக் கேட்டபோது, அவன் சொன்ன பதில் ஆச்சரியத்தைத் தந்தது. "ஏன் சொல் பேச்சு கேட்க வேண்டும்... என் தாயும், தந்தையும் நிம்மதியாக ஆனந்தமாக இல்லை. எப்போதாவது உபதேசம் செய்யும் உறவினர்களும் இவர்களைப் போலவே பாடுபடுபவர்கள்தான்.
ஆனந்தமாக வாழத் தெரியாத இவர்கள் சொல்லும் உபதேசங்களைக் கேட்டு நடந்தால், நானும் இவர்களைப் போலவே எதிர்காலத்தில் துக்கப்பட வேண்டியிருக்கும்தானே!
அப்பப்பா! எனக்கு வேண்டாம் இந்த வம்பு. இவர்களை விட நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அதை கெடுத்துக் கொள்ள வேண்டுமா?" என்றான்.
● நமக்கு தெரிந்த வாழ்வின் ஒரு சிறு பகுதிதான் மேலுள்ளது. அந்த தம்பதியரைப் போலவே, உங்களுக்குத் தெரிந்த வாழ்வின் 'தெரியாத பகுதிகள்' ஏராளம் இருக்கலாம். ஆராய்ச்சி நோக்கோடு கட்டுரையைத் தொடருங்கள்.