33. எப்படிப் பேசினாலும் உண்மை உண்மையே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஏரிக்கரைக்குச் சென்ற நான்கு பேரின் வாக்குவாதம் முற்றி சண்டையானது.
முதல் நபர்...
ஹிந்தி கலந்த தமிழில் சொன்னார், "வாருங்கள்! ஏரிக்குள் இருக்கும் பானியை குடித்து தாகம் தீர்க்கலாம்".
இரண்டாம் நபர்...
செந்தமிழில் சொன்னார், "தாகத்தை தீர்க்க தண்ணீரால் மட்டும்தானே முடியும். அங்கிருக்கும் பானி, தோணியெல்லாம் எப்படி தாகம் தீர்க்கும்".
மூன்றாம் நபரான ஆங்கிலேயர்...
ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னார், "உளறாதீர்கள். 1920ல் இந்த ஏரியைத் தோண்டியது என் தாத்தா வாட்சன் பிரபுதான்.
அவர் 'இந்த ஏரி முழுவதுமிருக்கும் வாட்டர் (Water) ஏழு கிராமத்தின் தாகம் தீர்க்கும்' என்று சொல்லியிருக்கிறார். எனவே வாட்டர் மட்டும்தான் தாகம் தீர்க்கும்" என்றார்.
நான்காம் நபர்...
பெங்காலி கலந்த தமிழில் சொன்னார், "என்ன மடத்தனம்! மூவருமே பொய் பேசுகிறீர்கள்.
கடந்த பத்து வருடமாக என் அப்பாதான் இந்த ஏரியை காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சொன்னார். 'இந்த ஏரியில் இருக்கும் ஜல்தான் நம்மைக் கோடைக்காலத்தில் காக்கிறது. தாகம் தணிக்கிறது' என்றார்.
எனவே ஜல்தான் தாகம் தீர்க்கும்" என்றார்.
வாக்குவாதம், "பானிதான்... தண்ணீர்தான்... வாட்டர் தான்... ஜல்தான்..." என மீண்டும் பேசப் பேச பேச்சு சண்டையானது. யாரும் ஏரிக்குச் செல்லவில்லை.
வாக்குவாதமில்லாமல் ஏரி சென்றிருந்தால், நான்கு பேருக்கும் உண்மை புரிந்திருக்கும். நான்கு பேரும் பேசுவது ஒரே உண்மையைப் பற்றியே என்பது புரிந்திருக்கும்.
● வார்த்தைக் கலகங்களைத் தாண்டி, மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள். உண்மை விளங்கும்.
