குருபூஜை என்றால் என்ன?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
'குருபூஜை' வேத பாரம்பரியத்திற்கும், அதிலும் குறிப்பாக அத்வைத பாரம்பரியத்திற்கு உரிய பூஜை முறையாகும். அத்வைதத்தை (இருநிலையற்றதன்மை) கடைபிடிப்பவர்களின் நோக்கம், வாழ்வின் லட்சியம் ஒன்றுதான். அது ஞானமடைதலேயாகும். அது கடவுளை தரிசிப்பதிலும் கடவுளைக் காண்பதிலும் நிறைவு பெற்றுவிடுவதில்லை. தனக்குள் இருக்கும் கடவுள்தன்மையை உணர்வதே இலக்காகும்.
"பூஜ்" என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததுதான் "பூஜை" என்ற வார்த்தை. இதற்கு வழிபாடு அல்லது ஆராதனை என்று பொருள். தினமும் குருபூஜை செய்வது குருவை நினைவில் சுமந்து, துதித்து, போற்றிடும் ஒரு பிரத்யேகமான வழி ஆகும். நமது எண்ணங்களை ஒரு முகப்படுத்தி, முழுமையாக அவர் மீது செலுத்தி, இனிமையான முறையில் குருசக்தியை உள்வாங்கிட உதவுகின்ற ஓர் அருமையான பாதை இது. கருணையுடன் நமக்கு அவர் அருள்கின்ற அனைத்திற்கும் நன்றி செலுத்துவதற்கான ஓர் வாய்ப்பு. குருவை ஸ்திரமாக நினைவில் கொள்வதன் மூலமாக, நாம் நம்முடைய ஆன்மீக பயணத்தில் முன்னேறுகிறோம். தொடர்ந்து குருபூஜை செய்வதன் மூலமாக, குருவுடன் உள்ள உறவு மேலும் ஆழமாகவும், நெருக்கமாகவும் செல்கின்றது.
குருசக்தியை நினைந்து, வார்த்தைகளின் மூலமாகவும், சாந்நித்யத்தின் மூலமாகவும், செய்கைகளின் மூலமாகவும் அல்லது வேறு பல சூட்சுமமான வழிகளின் மூலமாகவும், பற்றுகளிலிருந்து நம்மை விடுவிக்கின்ற சத்குரு நாதரை நினைத்து, குருவின் பாதத்தில் அர்ப்பணம் செய்து, குரு பூஜையுடன் நாம் நாளைத் துவங்கும் போது பிரபஞ்ச சக்திக்கே நன்றி செலுத்துகிறோம். இது தான் குரு பூஜையின் சாரம்.
குருபூஜை செய்யும் போதும் அல்லது குருபூஜை மந்திரங்களை உச்சாடனம் செய்யும் போதும், நம்மை நாம் குருவினுடைய மேன்மையான உணர்வு நிலையோடு இணைத்துக் கொள்கிறோம்.
மானச பூஜையில் அவரை நாம் நம்முள் வழிபடுவதாலும், பாஹ்ய பூஜை செய்து, சடங்குகளின் வாயிலாக வழிபடுவதாலும், நம்மை அவருடைய உணர்வு நிலையுடன் இணைத்துக் கொள்கிறோம். குருபூஜை செய்வதன் மூலம் நம்முடைய நாளை உற்சாகத்துடனும், ஆனந்தமயமான உணர்வுடனும் துவக்குகிறோம்.
குருபூஜையில் சொல்லப்படும் மந்திரங்களில் உள்ள உயர்ந்த சத்தியங்களை நாள் முழுவதும் நினைவில் கொள்ள முடிந்தால், அதே ஆனந்தமயமான உணர்வை, நம்முடைய எல்லா நடவடிக்கைகளின் போதும் அனுபவிக்க முடியும்.
நாம் உறங்கும்போது குருவுடன் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டு, நம்முடைய உணர்வு நிலை பழைய நினைவுகளை வெளிப்படுத்தத் துவங்குகிறது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது ஒரு கணம் இன்னொரு கணத்திலிருந்து பிறக்கிறது.
ஒரு எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளிதான் ஒரு க்ஷணம். நாம் குருபூஜையோடு அந்நாளைத் துவக்கும் போது ஒவ்வொரு க்ஷணமும் ஆனந்தமயமான உணர்வுடன் இருக்கின்றது. உறக்கத்தின் போது க்ஷணம் நின்றுவிடுகிறது. அப்போது நாம் சம்ஸ்காரங்கள் என்னும் நினைவுப்பதிவுகள் புதைந்துள்ள காரண சரீரத்திற்குத் திரும்புகிறோம். விழித்ததும் நாம் அதே நினைவுகளின் மனோநிலையிலேயே இருக்கின்றோம். ஆகவே, படுக்கையை விட்டு எழுந்தவுடன் குரு பூஜை மந்திரத்தை நினைவில் கொண்டால் முழுநாளுமே ஆனந்தமயமான உணர்வு நிலை பெறுகிறது.
குருபூஜை நம்மை, சத்தியத்திடம் மீண்டும் அழைத்து வருகிறது. நம்முடைய உணர்வு நிலையை குருவின் உணர்வு நிலைக்கு உயர்த்துகிறது.
குரு பூஜைக்கான செயல்முறை விளக்கம்
நாம் குருபூஜையை, குருவின் பாதங்களுக்கோ அல்லது குருவின் பாதுகைக்கோ அர்ப்பணிக்கின்றோம்.
பூஜைக்குத் தேவையான பொருட்கள்:

- குரு பாதுகை (குருவின் கமலப்பாதங்களை உருவகப்படுத்தும் பாதுகை சிறுதட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது).
- மலர்கள் (கைகள் கொள்ளும் அளவு) தட்டின்மீது வைக்கப்பட்டுள்ளது.
- வில்வ இலை (வில்வ இலை இல்லாதபோது நீரை அர்ப்பணிக்கலாம்).
- உத்தரணி - கரண்டியுடன் கூடிய பாத்திரம் (கோஷா, கோஷி- மீன் வடிவத்தை ஒத்த பாத்திரமும் உபயோகிக்கலாம்).
- சங்கு
- கமண்டலம் (புனித நீரை ஏந்த உதவும் பாத்திரம்).
- கற்பூரமும், கற்பூரத்தட்டும்.
- சந்தனச் சாந்து.
- குங்குமம்.
- ஊதுபத்தி.
- தீப விளக்கு மற்றும் தீப்பெட்டி.
- புதிய சிறு காவித் துணி.
- நைவேத்தியம் (புத்தம் புதிய பழம், பருப்பு வகைகள் அல்லது சமைத்த உணவு).
- மணி