KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/பாதையில் முள்கள்:Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

பாதையில் முள்கள்:

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியானப் பாதையில் ஒரே ஒரு உண்மையான தடை உள்ளது.

அதுதான் ஆணவம்.
என்ன சிக்கல்கள் வந்தாலும்,
என்ன பிரச்சினைகள் எதிர்ப்பட்டாலும்,
தெளிவாக இருங்கள்.
அவை எல்லாம் ஆணவத்தின் வெவ்வேறு குரல்கள்.

ஆணவம் என்பது என்ன?

உங்கள் சுயத்தின் உணர்வும், கருத்துகளின் சேகரிப்பும், உங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளும்தான் ஆணவம்.

ஆணவம் ஒரு கற்பனை! ஆணவம் உண்மையாக இருக்கும் பொருளே அன்று. என்றாலும் இந்த ஆணவமே நமது வாழ்வை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது!

உங்களைப் பிரித்துத் தனிமைப் படுத்தும் எண்ணத்தை உங்களுக்குள் தோற்றுவிப்பதும் ஆணவமே.

பிறப்பின்போது, உங்களைத் தாயிடமிருந்து பிரிக்கிறது. பிறக்கும் கணம் வரை ஆணவமே இருப்பதில்லை எல்லைக் கோடும் இல்லை. குழந்தை, தாயின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

பிறந்த கணத்தில், தொப்புள் கொடி அறுக்கப்பட்ட உடனேயே, குழந்தை தனக்கான எல்லையை முதன்முதலாக உணர ஆரம்பிக்கிறது.

பிறந்த பின், முதல் ஆண்டில், ஆணவம் உங்களைப் பற்றிய படத்தையும், உலகத்தைப் பற்றிய படத்தையும் உருவாக்கிக் கொள்கிறது.

‘நான்’ ‘எனது’ என்னும் உணர்வுகள் தோன்றுவதற் குக் காரணமே ஆணவம்தான்.

வாழ்க்கை முழுவதிலும், இந்த ஆணவம், “எனக்கு எதிராக அவர்கள்,” என்ற நிலையிலேயே உங்களை வைத்துக் கொண்டிருக்கிறது.

இது உங்களை உங்கள் பெற்றோர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும், இயற்கையின் எல்லா அம்ச ங்களிலிருந்தும் பிரித்து வைத்து விடுகிறது.

‘நான்’ என்று நீங்கள் உச்சரிக்கும் போதெல்லாம், நீங்கள் இயற்கையை விட்டு விலகித் தனித்துப்போய் விடுகிறீர்கள்.

உண்மையில் உங்களால் பிரிந்து போக முடியாது. ஏனென்றால், நீங்கள் இயற்கையின் ஒரு பகுதி - ஆனால் பிரிந்து போவது என்பது உங்கள் மனத்தில் ஏற்படும் நிகழ்ச்சி தான்.

நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் பிரிந்திருக்கக் கூடிய ஓர் உலகத்தை, உங்களுக்காக, நீங்களே படைத்துக் கொள்கிறீர்கள்.

உலகம் உங்கள் மனத்தில்தான் இருக்கிறது.

அது உங்கள் மனத்தின் கருத்தாக்கம் மட்டுமே. ஆனால் 'இந்தக் கருத்தாக்கமே, ஆணவமே சகல துன்பங்களுக்கும் காரணம்' என்று மக்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.

ஏன் அப்படி?

ஆணவம், வெறுப்பாலும் முரண்பாட்டினாலும் வளர்வது. எந்தத் தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும், அதுதான் ஆணவம் நிலைநிற்பதற்கான களம்.

ஆணவம், உங்கள் சொந்தக் கற்பனையின் தயாரிப்பாக இருந்தாலும், அது ஒரு தந்திரமான மிருகம்!

எல்லாப் பொருள்களும் ஒத்திசைவின்றிச் சிதைந்து கிடக்கும், ஒரு சிதறுண்டுபோன எதார்த்தத்தை ஆணவம் படைத்து விடுகிறது. தான் உயிர்வாழ்ந்திருப்பதற்காக இதைச் செய்து கொள்கிறது.

உங்கள் சொந்த வாழ்வைப் பாருங்கள்.

வேதனை, சினம், பொறாமை - ஆகியவற்றை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால், யாரிடமிருந்தோ நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறீர்கள் அல்லது யாரோலோ ஏமாற்றுப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்கள் என்று பொருள்.

துயரக் காலங்களில் இந்தத் தனிமை உணர்வு மேலோங்கி இருக்கும். இன்பக் காலத்தில், எல்லாருடனும், எல்லாவற்றினுடன் நீங்கள் சேர்ந்திருப்பீர்கள்.

மகிழ்ச்சி, ஆனந்தம், சிரிப்பு ஏற்படும்போதெல்லாம் உங்கள் ஆணவம் பலவீனப்பட்டுக் கிடக்கும்.

உங்களின் நிகழ்கால வாழ்வில், இந்தத் தருணங்களை, நீங்கள் தற்காலிகமாக அனுபவிப்பீர்கள். ஆனால் தியானம், உங்களை, நிரந்தரப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும்.

பிரபஞ்சம் முழுத்தினோடும் ஒருங்கிணைத்துக்கொள்ளச் செய்வது தியானம். தியானத்தில் தனிமைப்படலுக்கு இடமில்லை; ஆணவத்திற்கும் இடமில்லை.

எல்லாவற்றினோடும் ஒரு நிரந்தர ஒத்திசைவை ஒருமுறை உணர்ந்த பிறகு, இயற்கையின் அனைத்து அம்சங்களுடன் உள்ளார்ந்த உறவை ஒருமுறை உணர்ந்து விட்ட பிறகு, ஆணவத்தை வைத்திருப்பதற்கு என்னதேவை?

ஆணவம், உலகிற்கு எதிரான உங்கள் படைக்கலம்.

உலக வாழ்வின் போர்க் காலங்களில் இந்த ஆணவமே கேடயம். எங்கும் சமாதானமே நிலவும்போது, எல்லாமே ஒத்திசைவாக அமைந்து விடும்போது - படைக்கலன்களுக்கும், கேடயத்திற்கும் என்ன தேவை? அதனால்தான், தியானம் செய்வது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. தியானமோ மிக எளிதான ஒன்று! சும்மா அப்படியே அமர்ந்து உங்களது மூச்சைக் கவனித்துக் கொண்டிருக்கும் விஷயம்தான்.

உண்மையில், தியானத்தைக் கற்றுக் கொடுக்கும் தேவையோ அல்லது கற்றுக் கொள்ளும் தேவையோ இல்லை. அது இயல்பாகவே நிகழ்வது.

அசையாமல் அமர்ந்து, சில நிமிடங்களில் எதார்த்த நிலையின் ஒரு பொறியைக் கண்டுகொள்ளுங்கள். சில வினாடிகள் மட்டும் மௌனமாக அமர்ந்து, பாயும் எண்ணங்களை அமைதிப்படுத்துங்கள் - அப்படியே இருங்கள் - உண்மையை உணர்ந்துகொள்ள அது போதும்.

உண்மையை உணர்ந்துவிட்டால், ஆணவத்திற்கு இடமேது? ஆணவம் தானாகக் கழன்றுக்கொள்ளும். இயல்பாகவே அதை நீங்கள் கைவிட்டு விடுவீர்கள்.

அதனால்தான், ஆணவம் தியானத்தைக் கடுமையாக எதிர்த்து போரிடுகிறது.

ஆணவத்தின் மரணமே தியானம்!

நீங்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப் பெரிய பிரச்சினையே ஆணவத்தின் எதிர்பார்ப்புத்தான். நீங்கள் தியானம் புரிகையில், ஆணவம் ஆயிரம் வினாக்களுடன் எதிரே வரும். ஆணவத்திடம் உள்ள பயங்கரமான ஆயுதம் சந்தேகம்!

ஆணவம், உங்கள் மனத்தில் சந்தோஷங்களையும், வினாக்களையும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கும்.

ஆரம்பத்தில் அது கவலையைத் தரக்கூடும்.

மெய்யாகவே நான் தியானம் செய்ய முடியுமா?

முதுகு வலிக்கப் பல மணி நேரம் நான் அமர்ந்திருக்க வேண்டுமா?

இந்தப் பாதை எனக்குச் சரியானதானா?

நான் அதற்குள்ளே ஆழமாக இழுக்கப்பட்டு விட்டால் என்ன ஆவது?

என் குடும்பம் என்ன ஆவது?

என் நண்பர்கள் என்னைக் கிறுக்கன் என்று சொல்ல மாட்டார்களா?

நான் உண்மையில் கிறுக்கன்தானா?

நீங்கள் குருவுடன் சேர்ந்து இருந்தால்கூட, குருவுக்கு எதிரான சந்தேகங்களைக்கூட ஆணவம் தோற்றுவிக்கும்!

இவர் உண்மையிலேயே குருதானா?

எனக்கு எந்தத் தியானமுறை சரியான பலன் தருமென்று இவரால் கணிக்க முடியுமா?

தியானத்தை பரப்புவதின் உள்நோக்கம் என்ன?

இவையெல்லாம் ஒருவகை வசியங்களோ?

இப்படிப்பட்ட வினாக்கள் எழுந்தால், கவலைப்படாதீர்கள். வினாக்களை தூக்கி எறிந்துவிட்டு, தியானத்தைத் தொடருங்கள்.

அந்த வினாக்களைக் கண்டு, குற்றவுணர்வு கொள்ளாதீர்கள்!

எல்லாருடைய மனத்திலும் இயல்பாக எழுவதுதான் அவை.

அந்த வினாக்களுடன் மோத முயலாதீர்கள். ஆணவத்துடன் மோதும் தவற்றைச் செய்து விடாதீர்கள். ஏனென்றால், ஆணவம் ஒரு கற்பனை; அது உண்மையில் இருக்கும் ஒன்றல்ல. விழிப்புணர்வு இல்லாமையே ஆணவம்.

வெளிச்சம் இல்லாமையே இருள் - என்பதுபோல, விழிப்புணர்வு இல்லாமையே ஆணவம்.

இருட்டு அறையில் நீங்கள் இருக்க நேர்ந்தால், அறையை வெளிச்சப்படுத்துவதற்காக, இருளோடு மோதி அதை வெளியே தள்ள முயல்வீர்களா என்ன? சொல்லப்போனால், உங்கள் தீர்வுக்கும் இருட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

இருட்டை முற்றிலும் புறக்கணித்து விட்டு, ஒரு விளக்கை உள்ளே கொண்டு வாருங்கள். இருட்டு தானாகக் காணாமல் போய்விடும்.

அதேபோல, ஆணவத்துடன் மோதுவதில் நேரத்தை வீணாக்காதீர்கள். தியானத்தில் விழிப்புணர்வைக் கொண்டு வரப் பாருங்கள். அடுத்தடுத்து, அந்த வினாக்கள் தாமாகவே போய்விடும்.

ஆணவத்தின் மிகப் பெரிய பேச்சுக்குப் பிரதிநிதி மனம்தான். உடலைப்போலவே, மனமும் உங்கள் கைகளில் ஒரு கருவியாகிவிட வேண்டும்.

மனம் அற்புதமான கருவி; எல்லையற்ற சக்தி படைத்தது; படைப்பாற்றலின் ஓர் அற்புதம்; வடிவமைப்பில் தலை சிறந்தது.

பிறகு, மனம் ஒரு சமூகத் தேவையும்கூட. மனம் இல்லாமல், நாம் உலகிற்குப் பணி செய்ய முடியாது.

ஆனால் மனம் என்பது ஒரு கருவிதான் என்பதை நாம் மறந்து போகிறோம் - நாமே அதன் கருவியாக மாறிப் போய் விடுகிறோம்! நாம், முழுக்க முழுக்க மனத்தால்தான் கட்டுப்படுத்தப் படுகிறோம்.

எதார்த்த நிலையிலிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதற்காக, மனம் செய்யும் மாபெரும் தந்திரம், மொழியைப் பயன்படுத்துவதுதான்.

சொற்களே நம்மை எதார்த்த நிலையிலிருந்து தனிமைப்படுத்துகின்றன.

நாம் ஒன்றைப் பார்த்தவுடனே, அதைச் சொற்களாக மாற்ற முயற்சி செய்கிறோம்.

ஒரு மலரைப் பார்த்தவுடன், 'இது பூ' என்று, உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள். வாழ்வின் எல்லாவற்றையும், நாம் சொற்களைக் கொண்டே, அருவமான கருத்துகளைக் கொண்டே உள்வாங்கிக் கொள்கிறோம்; ஆனால் வார்த்தைகள் அனுபவங்கள் அல்ல!

‘மலர்’ என்ற சொல், மலர் அன்று, ‘அன்பு’ என்ற சொல் அன்பு அன்று.

‘ஞானம் பெறுதல்’ என்ற சொல், ஞானம் பெறுதலன்று.

உங்களுக்கும் எதார்த்தத்திற்கும் நடுவில் சொற்கள் மதில் எழுப்பிவிடுகின்றன.

தியானத்திற்குச் சொற்கள் தேவையில்லை. எதார்த்த நிலையை நேரடியாக அனுபவிப்பதே தியானம்.

ஆனால் மனம் சொற்களைக் கொண்டு இதில் ஓயாமல் அரட்டை அடிக்கிறது, . ஒரு கண நேரம்கூட, மனம் உங்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.

மனம், ஓயாமல், யோசனைகளையும், கருத்துகளையும், அபிப்பிராயங்களையும் உங்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது. எதார்த்தத்தைச் சிதறடிக்க, மனம் சொற்களைப் பயன்படுத்துகிறது!

மனத்தை எப்படித்தான் கையாள்வது?

ஆணவம் பற்றி நான் முன்னே சொன்னதுபோலத்தான் மனத்தோடு மோதாதீர்கள், மனத்தோடு போராடி, நீங்கள் எதையுமே சாதித்துவிட முடியாது.

உங்களால் போராடக்கூட முடியாது!

ஏனென்றால், போராடுவதுகூட மனத்தின் செயல்தான்!

உங்கள் மனத்தின் ஒரு பகுதி, இன்னொரு பகுதியுடன் போராட ஆரம்பித்துவிடுகிறது. அதனால் உங்கள் மனத்தின் செயல்பாடுகளைச் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருங்கள்.

அது எளிதான காரியமல்லதான். குறிப்பாக, இந்த வழியில், மனம் ஓர் ஆபத்தான வழித் துணைவன்!

முதலில், அது உங்களுக்குள் எல்லாவித அச்சங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கும். உங்கள் எண்ணங்களின் போக்கை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தவுடனே, நீங்கள் உண்மையாகவே பார்த்துக் கொண்டிருப்பதாக அது உங்களை நம்ப வைக்கும். மனம் அப்படி உங்களிடம் சொன்னால், மனம் வேலை செய்கிறது என்று அர்த்தம்!

நீங்கள் உண்மையாகவே பார்த்துக் கொண்டிருந்தால், எந்த அபிப்பிராயங்களும், எந்தத் தீர்ப்பும், எந்தக் கருத்தும் உங்களுக்குத் தோன்றாது.

"இவை எண்ணங்கள். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என்ற அளவுக்கு வந்துவிடுவீர்கள்.

மிகத் தெளிவாக இருங்கள்: மனம் உங்கள் எதிரி அன்று.

சிந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. மற்ற செயல் முறைபோல் அதுவும் ஒன்று.

உங்களை மோதல் நிலையில் வைத்துக் கொள்ளாதீர்கள். மனத்தின் பார்வையாளராக மட்டும், எண்ணங்களின் போக்கைக் கவனிப்பவராக மட்டும் இருங்கள். மனத்தின் விளையாட்டைக் கண்டு மகிழுங்கள்!

நீங்கள் உங்கள் சிந்தனைகளைக் கவனித்து வர வர, அவற்றின் போக்கு மெல்ல மெல்ல நிதானமடையும்.

உங்களின் விழிப்புணர்வு ஆழப்படப் பட, அவற்றின் போக்கிற்கு இடையே, இடைவெளிகள் தோன்றுவதை உணர்வீர்கள்.

ஒரு மின்வெட்டுப்போல அந்த இடைவெளிகள் தோன்றி உடனே மறைவதை நீங்கள் காணலாம்.

அந்தச் சின்ன இடைவெளி பொழுதில், அழகிய அமைதி அனுபவம் சித்திக்கும்.

பிறகு, அந்த இடைவெளிகள் அடிக்கடி தோன்ற ஆரம்பிக்கும்.

அந்த அனுபவத்துடன்கூட அதிகம் சார்ந்திருக்க வேண்டாம்! அதற்காகக் காத்திருக்கவும் வேண்டாம்.

அந்த இடைவெளிகளின் காலம் அதிகரிக்கும்போது புற உலகை மட்டுமல்லாமல், அக உலகையும் மிகத் துல்லியமாக உங்களால் காண முடியும்.

மனம் கடந்த நிலையின் அனுபவம் இதுதான். இது நம் சக்திக்கு மீறியது என்று நினைக்க வேண்டாம்!

நீங்கள் ஈடுபாட்டுடனும், முழுமையாகவும் பயிற்சி செய்யும்போது, அது நிகழவே செய்யும்.

தியானத்தை ஆனந்தமாக அனுபவிப்பது எவ்வாறு?

காலத்தை ஒதுக்குங்கள் :

தினசரி ஒரு அரைமணி நேரமாவது தியானத்திற்கு ஒதுக்குங்கள். எங்கும் எப்போதும் செய்யும் தியானங்களை நீங்கள் பயிற்சி செய்யத் திட்டமிட்டிருந்தாலும்கூட, அமர்வுத் தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒதுக்குங்கள்.

ஆரம்பத்தில், ஒரு சில ஒழுங்குமுறைகளைத் தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

  • விழிப்புணர்வுப்பூர்வமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  • தியானத்திற்கேற்ற தகுதியான சூழலையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
  • அந்த நேரத்தில் இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். எந்த வேலையையும் அப்போது ஒப்புக்கொள்ள வேண்டாம்.
  • அந்த நேரத்தில் நீங்கள் தனியாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உங்கள் குடும்பத்தாரும், நண்பர்களும் உணரும்படி செய்யுங்கள்.
  • ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் அதை வைத்துக் கொள்ளுங்கள். அந்த வழக்கத்திற்கு உடலும், உள்ளமும் விரைவில் பழக்கப்பட்டு விடும்.

ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட அதே நேரத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தால், விரைவில் தியான நிலைக்குள் நீங்கள் பிரவேசித்து விடுவதை உணரலாம்.

இடம் ஒதுக்குங்கள்:

குப்பை கூளங்களற்ற தூய்மையான, அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்றது. முடிந்தால், உங்கள் வீட்டில் ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்வது நல்லது.

உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால், அது தியானத்திற்குப் பொருத்தமான இடம்.

ஏற்கனவே பிரார்த்தனை, வழிபாடு நடத்தி வந்த இடம் என்பதால், அங்கே சக்திநிலை மிகுதியாக இருக்கும். அது தியானத்திற்கு மிகவும் உதவும் படியாக அமையும்.

தினசரி ஒரே இடத்தில் தியானம் செய்து வருவது நல்லது. அது அறையாக இருந்தால், போதிய காற்றும், வெளிச்சமும் இருக்க வேண்டும்.

வெளியில் தியானம் செய்வதானால், வீட்டுத் தோட்டம் நல்லது. ஆனால் அங்கே ஓசை இடையூறுகள் எதுவும் இருக்கக் கூடாது.

சௌகரியமாக இருங்கள்:

உடல் சௌகரியமான நிலையில் இருந்தால்தான், தியானத்தை நிம்மதியாகச் செய்ய முடியும். "உடலை மறந்து விடு," என்கிறது தியானம். உடலால் தொல்லைகள் ஏற்பட்டால், எவ்வாறு அதை மறந்து, அதைக் கடந்து செல்ல முடியும்?

பல தியான முறைகள் தரையில் அமர்ந்து செய்யக் கூடியவை. அந்தப் பழக்கம் இல்லையென்றால் நாற்காலியைப் பயன்படுத்தலாம் - ஆனால் தரையில் அமரவே முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு குஷனை அமர்வதற்குப் பயன்படுத்தலாம். தரையில் படுத்துச் செய்யும் முறைகளுக்கு, வெறும் தரையில் படுக்க வேண்டாம், பாயோ, விரிப்பையோ பயன்படுத்துங்கள்.

உணவு உண்டு இரண்டு மணி நேரமாவது ஆனபிறகு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்ப நிலையில், தியானத்தின்போது தூக்கம் வருவது போலத் தோன்றலாம். அது தாமச குணம் - மந்தம் - நமது உடல் கட்டமைப்பைக் கீழே படியச் செய்வது.

உறக்கத்திற்கு எதிராகச் செயல்பட வேண்டாம்

  • அவ்வாறு செயல்பட முனைந்தால், தூக்கமும் வராது, தியானமும் நிகழாது!

தூக்கம் வருவதுபோல் இருந்தால் அதற்காகக் குற்றஉணர்ச்சி கொள்ள வேண்டாம். தூக்கம் வருகிறதா, தூங்குங்கள்! தூக்கம் முடிந்தவுடன், எழுந்து தியானம் செய்யலாம்! அவ்வளவுதான்!

வினா: தியானமும்கூட ஒரு செயல்தானே? விடை: ஆம்! ஆரம்பத்தில் அப்படித்தான்.

மௌனமாக அமர்ந்திருப்பதுகூட ஒரு செயல்தான்! உங்கள் மூச்சை கவனித்துக் கொண்டிருப்பதுகூட ஒரு செயல்தான்.

ஆரம்பத்தில், மற்ற காரியங்களைப் போலவே தியானமும் ஒரு செயல்தான் தோன்றும் - இதுவரை உங்கள் இயல்பில் இல்லாத ஒன்றைத்தானே இப்போது செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள்.

தினமும் நீங்கள் இயல்பாகவும், சரியாகவும் செய்துகொண்டிருக்கும் உட்காருவது, நடப்பது போன்ற சாதாரண செயல்கள்கூட உங்கள்மீது கட்டாயமாகத் திணிக்கப்படும்போது, அது ஒரு கடினமான செயலாகவே உங்களுக்குத் தோன்றும்.

'சும்மா அமர்ந்திருப்பது' என்ற ஜென் தியான முறை ஒன்று இருப்பது தெரியுமா? அங்கேயும்கூட அதில் ஈடுபடுகிறவர்கள், இதைச் செய்யப் போராட வேண்டியிருக்கிறது!

ஆரம்பத்தில் நிச்சயமாக அது ஒரு கடினமான செயல்தான். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் தியானம் என்பது ஏதோ ஒன்றைச் ‘செய்வது’ அல்ல. ஏனென்றால் அதைச் சரியான வழியில் செய்ய ஆரம்பிக்கும்போது, தியானத்தில் வெற்றியும் பெறும்போது எல்லாப் போராட்டங்களும் மறைந்து விடும்.

நீங்கள் முழுமையான நிம்மதியில் இருக்கும்போது, எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, தியானத்தை அனுபவிக்க ஆரம்பிக்கும்போது மெல்ல மெல்ல, நீங்கள் தியானம் செய்து கொண்டிருப்பதையே அறிய மாட்டீர்கள்! பிறகு அது ஒரு செயலாக இராமல் போய் விடும்!.