அணிமா தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இந்தத் தியானமுறையைப் பற்றி :
மற்ற நாட்களைவிடச் சில நாட்களில், நீங்கள் பாரமாக இருப்பதாக உணர்கிறீர்கள் அல்லவா?
அந்தப் பாரம் உங்கள் உடலின் பாரம்.
நீங்கள் கனமற்றவர்.
தொடர்ந்து உடலோடு கொண்ட அடையாளம் காரணமாக, நமக்குக் கனம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.
உங்கள் உடல், ஒரு பொருள். அதனால் அதற்குச் கனம் இருக்கவே செய்யும்.
விழித்திருக்கும் காலத்தைவிட, உறங்கும் போதோ, மயக்கமடைந்து கிடக்கும்போதோ நமது உடல் கனம் அதிகமாக இருப்பதை உணரலாம்.
விழிப்புணர்வு வந்தவுடனே நீங்கள் கனம் குறைந்தவராக இருக்கிறீர்கள். கனம் குறைந்து விட்டதுபோல உணர்வதல்ல; உண்மையாகவே கனம் குறைந்து விடுகிறது.
உங்கள் இருப்பின் உண்மையான கனமற்ற தன்மையை உணர, நீங்கள் உடல் கடந்தோ, மனம் கடந்தோ போக வேண்டும். காரணம் மனத்திற்குக்கூட ஒரு கனம் இருக்கிறது. நீங்கள் கவலையுடன் இருக்கும்போது உடல் பாரமாக இருப்பதுபோல் தெரிகிறது. ஏதோ ஒன்று, உங்களைக் கீழ் நோக்கி இழுப்பதுபோல் உணர்கிறீர்கள்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீங்கள் கனமற்றவராக உணர்கிறீர்கள். காற்றில் நடப்பது போல் உணர்கிறீர்கள்!
காரணம், மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்கள் உடலை மறந்து விடுகிறீர்கள்; மனத்தை மறந்து விடுகிறீர்கள். எந்த முயற்சியும் இல்லாமலேயே, கனமற்றவராக உணர்கிறீர்கள்.
ஆனால் நடைமுறை வாழ்வில், நீங்கள் புறச்சூழல்களால் கட்டுப்படுத்தப்படுகிறீர்கள். இந்தத் தியானத்தில், நமது விருப்பத்தினால், கனமில்லா உடல் உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறோம்.
செயல்முறை விளக்கம் :
எங்காவது அமர்ந்து கொண்டு, உங்களை நீங்களே கனமற்றவராக நினைக்கத் தொடங்குங்கள்.
முதுகு நிமிர்ந்திருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
உங்கள் முதுகுதண்டு நேராக இருக்கும்போது,
நீங்கள் இயல்பாகவே எடையற்றவர்போன்ற உணர்வை
உணரத்தொடங்கிவிடுவீர்கள்.
முதுகுத்தண்டு நேராக இருக்கிறதா இல்லையா என்பதை எப்பத் தெரிந்து கொள்வது? முதுகுத்தண்டை நேராக நிமிர்த்திவைப்பது எப்படி?
நிமிர்ந்து உட்கார்ந்தபடி, உங்கள் முதுகை, மெதுவாக முன்னும் பின்னுமாக அசைக்க ஆரம்பியுங்கள்.
அசைவு மிக மெதுவாக, கொஞ்சமாக இருக்கட்டும். ஒரு கட்டத்தில், நீங்கள் தொந்தரவில்லாமல் இருப்பதாக உணர்வீர்கள்.
அந்த நிலையை மையமாகக் கொண்டு, இடப்பக்கம் வலப்பக்கமாக அசைய ஆரம்பியுங்கள். சட்டென, நீங்கள் லேசானவராக, கனமற்றவராக உணர்வீர்கள். இந்த மையத்தில் புவிஈர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். இந்த மையத்தில்தான் முதுகு நேராக நிமிர்ந்து இருக்கும்.
இப்போது, நீங்கள் கனமே அற்றவராக இருப்பதாகக் கற்பனை செய்ய ஆரம்பியுங்கள்.
ஆரம்பத்தில் அது எளிதாக இருக்காது. உங்கள் உடல் பாரத்தை உணர்ந்துகொண்டேதான் இருப்பீர்கள்.
ஆனால் தொடர்ந்து உங்களுக்கு நீங்களே, 'நீங்கள் கனமற்றவர்' என்று சொல்லிக்கொள்ளுங்கள், உங்களைக் கனமற்றவராக உணருங்கள். பிறகு சட்டென வரும் ஒரு தருணத்தில், நீங்கள் கனமற்றுப் போனதை உணர்வீர்கள். இது தான் முற்றிலும் உண்மையான நிலை!
இது, உங்களுக்கு நீங்களே மனோவசியம் செய்து கொள்வதன்று.
உண்மையைப் பார்க்கப்போனால், உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களைக் கனமுள்ளவராக நினைக்கும் ஒருவகை மாயையில், மனோவசியத்தில்தான் இருக்கிறீர்கள். உங்கள் உடல் கனமுள்ளதாக உணர்வதால், அது உங்கள் கனம் என்று கற்பனை செய்து கொள்கிறீர்கள். இதுதான் சுய-வசியம்.
கனமற்றவராக உணருங்கள். தொடர்ந்து அப்படியே நினையுங்கள்.
நீங்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, உங்கள் உடல் பற்றிய அடையாளத்தை, அடியோடு அறுத்து விடுவீர்கள்.
உடலின் எல்லைக்கோடு தகர்ந்து விடும்.
நீங்கள் அளவற்ற சக்தி உடையவராக ஆகி விடுவீர்கள். நீங்கள் முடிவிலா வெளியை ஆக்கிரமித்துக் கொள்ளவும் முடியும். ஆனால் நீங்கள்தான், உங்களை இந்தச் சின்ன உடலுக்குள் திணித்துக் கொண்டு விட்டீர்கள்!
உங்கள் வேதனை, கவலை, கனம் ஆகியவற்றிற்கெல்லாம் அதுதான் மூலகாரணம்.
நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளும்போது, உங்களது எடையின்மையை நீங்கள் தானாகவே உணர்ந்து கொள்வீர்கள். தியானத்திற்குள் மிக ஆழ்ந்து செல்லும்போது, உங்களால் உங்கள் உடலை உங்களுடன் எடுத்துச் செல்லவும் முடியும்.
உங்களின் தூயவிழிப்புணர்வாற்றலின் மூலம் உங்கள் உடலையே உயர தூக்க முடியும். அது புவிஈர்ப்புவிசையை எதிர்த்து, மேலே காற்றில் மிதக்கும்!
அதைத்தான் ‘அந்தரத்தில் மிதத்தல்’ என்று சொல்கிறார்கள். இதைப் பல யோகிகளாலும், யோகினிகளாலும் செய்துகாட்ட முடியும்.
நாம் கனமற்றவராக உணரும்போது, உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் விடுபட்டு விடுகிறோம்.
எடையற்றவராக உணர்வது என்பது, முழுப் விழிப்புணர்வுநிலை, அது ஒரு சில கணங்களாக இருந்தாலும் சரி. இந்த உத்தி, முழு நிம்மதியையும், முழுப் புத்துயிர்ப்பையும் வழங்கக் கூடியது.
சிரிப்புத் தியானம்
இந்த உத்தி பற்றி :
எந்த அளவுக்கு நீங்கள் அடிக்கடி சிரிக்கிறீர்கள்?
நாம் சிரிக்கும்போது, மாபெரும் ஆன்மிகப் பயிற்சி ஒன்றை மேற்கொள்கிறோம் என்ற நினைவே நமக்குச் சுத்தமாக இல்லை!
சிரிப்பு, உங்களை உங்கள் மூலத்தோடு இணைக்கிற மிகவும் நெருக்கமானதொரு உள்ளார்ந்த வழி.
அது மிக எளிதானது; மிகுந்த ஆற்றல் கொண்டது.
வாழ்வில், ஒவ்வொருவரும் எப்போதாவது பயிற்சி செய்து பார்த்திருக்கும் ஒரே தியானம் இதுதான்.
சிரிப்பு, அளவு கடந்த ஆற்றலின் மூலம்.
சும்மா சிரித்துப் பாருங்கள், சக்தி உங்கள் மையத்திலிருந்து பொங்கி எழுந்து, பெருவெள்ளமாய் உங்களை நிரப்பிவிடும்.
நீங்கள் சிரிக்கும்போது...
உங்கள் எல்லை மதில்கள் தகர்ந்து விடுகின்றன.
சுயத்தின் உணர்வை நீங்கள் இழந்து விடுவீர்கள்.
நீங்கள், சிரிப்பால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவீர்கள்.
இதைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒரே சமயத்தில், சிரிக்கவும், சிந்திக்கவும் முடியாது!
நீங்கள் சிரி சிரியென்று சிரித்துக் கொண்டிருக்கும் போது, எண்ணத்திற்கு அப்போது இடமில்லை என்பதை, ஒரு கணப்பொழுதில் உணர்ந்து கொள்வீர்கள். அப்போது, மனமற்ற நிலையை நீங்கள் அனுபவிப்பீர்கள்! நான் சொல்லும் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பன்று; ஏளனம் கலந்த அரைச் சிரிப்புமன்று; புன்முறுவலும் அன்று. அது, அழகான பெரும் சிரிப்பு.
அது உங்களை நிறைத்து, வெளியேயும் பிரவகிப்பது. காரணமற்ற சிரிப்பு இது.
சாதாரணமாக, ஏதோ ஒரு காரணத்தால்தான் சிரிக்க ஆரம்பிக்கிறீர்கள் - ஆனால் ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், அந்தச் சிரிப்பு உங்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறது. அதற்குப் பிறகு சும்மா சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். காரணம், நீங்கள் சிரிப்பதால்தான்! அவ்வளவுதான்.
சிரிப்பின் மகிழ்ச்சியே உங்களைச் சிரித்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. உங்களுக்கு அது பற்றிய நினைவுகூட இருக்காது.
ஜப்பானியத் துறவி ஹோடெய் என்பவருக்கு 'சிரிக்கும் புத்தர்' என்று பெயர். அவருடைய ஆன்மிக நற்செய்தி முழுவதையும் ஒற்றைச் செயலில் அடக்கி விடலாம்.
அதுதான் சிரிப்பு!
அவர் ஊர் ஊராக அலைந்து கொண்டே இருப்பார். பொது இடங்களில் நின்று சிரிக்க ஆரம்பித்துவிடுவார்! சிரிப்பென்றால், சத்தமிட்டுச் சிரிக்கும் பெரும் சிரிப்பு; வயிறு குலுங்கச் சிரிப்பது.
சிரிப்பால் அவரது உடலே குலுங்கும். அந்தச் சிரிப்பு, அவரிடமிருந்து அனைவருக்கும் பரவி, ஒரு பெரும் சக்தி அலையை உருவாக்கும். அவரது சிரிப்பு, ஒர் ஒட்டுவார் ஒட்டிபோல எங்கும் பரவி ஊரே அவரோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்து விடும். அந்த ஊரே சிரிப்பால் ஆசிர்வதிக்கப்பட்டுவிடும்!
எந்த உத்தியும் இல்லாமல், எந்த முயற்சியும் செய்யாமல், அந்த நினைவுகூட இல்லாமல், ஊர் முழுவதுமே, மனமற்ற நிலையின் ஒரு சின்ன பொறியை அனுபவித்துவிடும்.
சிரிப்பு என்பது, எப்பேர்ப்பட்ட தலைசிறந்த தியான முறை!
செயல்முறை விளக்கம் :
ஒவ்வொரு நாள் காலையிலும், கண் விழித்தவுடன், ஒரு குழந்தையைப்போலக் கரைகால்களை நீட்டுங்கள். விழித்தவுடன் குழந்தைகள் நீட்டி நிமிர்வதைக் கவனித்திருக்கிறீர்களா?
இப்படியும் அப்படியும் நீட்டி, நிமிர்ந்து சடவு வாங்கி, உடலை வளைத்து முறுக்குங்கள். உடலின் ஒவ்வொரு தசைநாரும் நீண்டு நிமிரட்டும்!
பிறகு, கண்களைத் திறக்காமலேயே சிரிக்கத் தொடங்குங்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் முயற்சி மேற்கொள்ளத்தான் வேண்டிவரும். பிறகு, உண்மையான சிரிப்பு, உங்களுக்குள் பொங்க ஆரம்பித்துவிடும்.
சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லையென்றால், சிரிப்பதற்கு நீங்கள் முயற்சி எடுக்கும், கோமாளித்தனமே உங்களுக்குச் சிரிப்பைக் கொண்டு வந்துவிடும்!
சிரிப்பு ஒரு முறை உங்களைப் பற்றிக் கொண்டு விட்டால், அதை அப்படியே தொடர விடுங்கள்.
எவ்வளவு நேரம் என்ற வரையறை இதில் இல்லை.
சலிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருங்கள்.
சிரிக்கச் சிரிக்க, சிரிப்பை நீண்டநேரம் நீட்டிக்க உங்களால் முடியும்.
நாற்பத்தைந்து நிமிடம் ஒருவரால் தொடர்ந்து சிரிக்க முடியுமானால், அவர் ஞானம் பெற்று விடுவார் என்று புத்தர் சொல்லியிருக்கிறார், வெறும் நாற்பத்தைந்து நிமிடச் சிரிப்பில்!
அதனால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சிரியுங்கள்! சிரிப்பைத் தொடர்வதற்கான சக்தி உங்களுக்குள் பொங்கி எழும்.
சிரித்து முடித்து நீண்ட நேரம் ஆன பின்பும், சமதளத்திற்கு அடியில், அந்தச் சிரிப்பலைகள் நிலை கொண்டுதான் இருக்கும்.
தினசரி, காலை செய்யும் சில நிமிடச் சிரிப்பு, உங்கள் நாள் முழுவதையுமே மாற்றி அமைத்துவிடும்.