மகா வாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
“இதய மையம் திறக்க வாழ்வே அர்த்தம் நிறைந்ததாகிறது.”
மனிதர்கள்
தலைக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.
கலைஞர்கள்
இதயத்துக்குள் சிக்கிக் கொண்டவர்கள்.
புத்தன்,
மூன்று மையத்துக்குள்ளும்
சிக்கிக் கொள்ளாமல்,
புகுந்து வெளிவந்து
ஜிகுஜிகுவென பொங்கும்
ஆனந்த உணர்விலேயேயிருப்பவர்.
தலை தாண்டி,
இதயம் தாண்டி,
ஆனந்தம் தாண்டி,
பார்க்கையில்
வாழ்வு பரவசமாகிறது.
அப்புறம்
எதைச் செய்தாலும்
ஆனந்தமாயிருக்கும்.
எதையும் செய்யாவிட்டாலும்,
ஆனந்தமாயிருக்கும்.
அர்த்தமற்றது எல்லாம்,
அர்த்தமுள்ளதாக
இதய மையம்
திறக்கக் கடவது.
நானோர் ஆசிரியை. சிறுவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆனந்தமாய் இருக்கிறார்களே எப்படி?
-திலோத்தமா, கேரளா
சிறுவர்கள் இன்னும் எந்த மையத்துள்ளும் சிக்கிக் கொள்ளவில்லை. அவர்களின் உயிர்ச்சக்தி உடல் முழுக்க ஓடி விளையாடுகிறது.
அவர்கள் நாபி மையத்திலிருந்து, அதாவது ஆனந்த மையத்திலிருந்து செயல்படுபவர்கள். அதனால்தான் அவ்வளவு ஆனந்தமாயிருக்கிறார்கள்.
குழந்தையைப் பாருங்கள், அவர்கள் சிறுவர்களைவிட இன்னும் மிக ஆனந்தமாயிருப்பார்கள். அவர்களுக்கு எதைப் பார்த்தாலும் மகிழ்ச்சிதான். கையில் எது கிடைத்தாலும் அந்த நிமிடம் அக்குழந்தைக்கு கொண்டாட்டம்தான். கெட்டிமேள சத்தமில்லாமலே ஆடுவார்கள், பாடுவார்கள், கொண்டாடுவார்கள்.
காரணம், குழந்தைகளும் சிறுவர்களும் வெளிப்பொருளால் உள்ளே இன்பமாகிறவர்கள் அல்ல. உள்ளுக்குள்ளே மிக இன்பமயமான உணர்விலேயே இருப்பதால், வெளியேயும் அவர்களால் இன்பமாக, ஆனந்தமாக இருக்க முடிகிறது.
மனிதர்களின் மூளை பெருத்ததும்... உயிர்ச்சக்தியானது, உணர்வு ரீதியாக செயல்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது. உணர்வு குறைய, உற்சாகம் குறைகிறது. மூளை ரீதியான அணுகுமுறைகளை வர்ணிப்பதிலும், உள்ளே கோபப்பட்டு பேசுவதிலும், உள் அரட்டையிலும் மனித சக்தியும் நேரமும் விரயமாகிவிடுகிறது.
ஆனந்தமாயிருக்கத் தேவையான எல்லா அடிப்படைகளும் துடைக்கப்பட்ட பிறகு, ஆனந்தம் எங்ஙனம் சாத்தியமாகும்?
சிறுவயது தாண்டும்போது, நீங்கள் இழந்தவற்றை மீண்டும் திரும்பப் பெறவாவது நீங்கள் உழைக்க வேண்டும்.
சிந்தனைத் துளிகள் : காலால் தலையைத் தொட முடியும்... தோல் வழியாய்! தலையால் காலல்ல, கையைக்கூட தொட முடியாது...
உணர்வு வழியாய்!
இதய ரீதியாக வாழ ஆரம்பிக்க, முதல்முறையாக வாழ ஆரம்பிக்கிறீர்கள்.
தேனைச் சுவைக்கிறீர்கள்...
சுவைக்கிறீர்கள் எனத் தெரிகிறது.
சுவைக்கச் சுவைக்க,
இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தோன்றுகிறது
எனில், நீங்கள் வாழ்வது தலையில்.
நாவிலும், வாயிலும் சுவையை உணர்வதைத் தாண்டி, சுவைக்கச் சுவைக்க அதில் கரைந்து போகிறீர்கள். அது சில துளிகளானாலும் திருப்தியைத் தருகிறது எனில், நீங்கள் வாழ்வது இதயத்தில்.
தேனின் இனிமையையும், தித்திப்பையும் உணர என்ன சுக மாற்றங்கள் நிகழ்கிறதோ... அது உடலெங்கும் நிகழக் காண்கிறீர்கள். ஒரு சொட்டு உங்களைப் பரவசமாக்குகிறது எனில், நீங்கள் வாழ்வது ஆனந்த மையத்தில்.
இதயம் உங்களின் இலக்கு.
ஆனந்தம் உங்களின் இருப்பு
இதயம் தாண்ட, ஆனந்தத்தில் நிற்பீர்கள்!