KAILASA Library/மனதைத் திற/மகா வாக்கியம்Sign in
மனதைத் திற

மகா வாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்தியும்; புத்தியும் கலக்கும்போது, சுறுசுறுப்புப் பொங்கும்!

புத்தி மிகாமல்,
சக்தி மட்டும் மிக,
நீங்கள் உணர்வதே விறுவிறுப்பு!

சக்தி மிகாமல்
புத்தி மட்டும் மிக,
நீங்கள் உணர்வதே
பரபரப்பு!

சக்தியும்
புத்தியும்
ஒருசேர மிக
நீங்கள் உணர்வதே
சுறுசுறுப்பு!

விறுவிறுப்பு புத்தியை மழுங்கச் செய்யும்!

பரபரப்பு உடலை மழுங்கச் செய்யும்!

சுறுசுறுப்பு
உடலையும், புத்தியையும்
விழித்துக் கொள்ளச் செய்யும்!

நிம்மதி விலையுயர்ந்த கனவாக மட்டுமே இருக்கிறது. ஏன்? யார் காரணம்?

  • ஜோதிமுருகன், பிச்சாவரம்.

உங்களைத் தவிர வேறு யாரும் இந்த நிலைக்குக் காரணமல்ல. பரபரப்பையும் விறுவிறுப்பையும் விரும்பும் அளவுக்கு, மனிதர்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் வரவேற்காததே மூலகாரணம்.

இன்றைய மனிதர்களின் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தாற்போல உருவாக்கப்படும் புத்தகங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும், உண்மையான இளைப்பாறுதலுக்கு இடமளிப்பதில்லை.

மேலும், இளைப்பாறுதலை சோம்பேறித்தனமென்றும், சோம்பேறித்தனத்தை இளைப்பாறுதல் என்றும் அவை மாற்றிச் சுட்டிக் காட்டுகின்றன. நீங்கள் மாறாதவரை அவை மாறாது.

ஒரு தாவோ ஞானியிடம், "யார் நிம்மதியை இழப்பார்கள்?" எனக் கேட்கப்பட்டபோது...

"பெரியவர்களாகப் போகும் சிறுவர்கள். பெரியவர்களாகிவிட்ட சிறுவர்கள்," என்றார். கேள்வி கேட்டவர் குழம்பிப் போனவராய், "யார் நிம்மதியாய் இருப்பார்கள்?" எனக் கேட்டவுடன், "சிறுவர்களும், சிறுவர்களாயிருக்கும் பெரியவர்களும்," என்றார்.

மனிதர்கள், வயது அதிகமாகிவிட்டது என்பதற்காக முகம் இறுகிப்போக வேண்டிய அவசியமில்லை. விகல்பமில்லாமல் சிரித்து கும்மாளமடித்து, கவலையில்லாமல் வாழும் சிறுவயது குணத்தைப் பெரியவரானதும் பலி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இவை வாழ்க்கைக்கு எதிரானவை. நிம்மதிக்குப் புறம்பானவை.

சிறுவயது குதூகல குணங்களை இழந்தவர்களே, பெரியவர் என்ற போர்வையில், பல சூழ்நிலைகளில் சிறுபிள்ளைத்தனமாக, அடம்பிடிக்கும் குழந்தையாகக் கத்தும் கோபக்காரக் குழந்தையாக இருப்பார்கள். சிறுவயது குதூகலத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்களே... பண்புமிக்க பெரியவர்களாக, நிம்மதியான மனிதர்களாக, உண்மையான மதிப்பு, மரியாதையோடு வாழ்வார்கள். நீங்களும் இப்படி மாற விரும்புகிறீர்களா?