முன்னுரை:
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
இரு யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி எனச் சொல்ல முடியாது.
அது, அடுத்த போருக்கான ஆயத்த காலம் மட்டுமே. அதுபோல் இரு பெரும் துன்பங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளை 'இன்ப நிகழ்வுகள்' எனச் சொல்ல முடியாது. அது, சிறிய துன்பம் மட்டுமே. வேதனையின் அளவு குறைவதை இன்பம் எனச் சொல்லக் கூடாது.
மனிதன் சுகம், சந்தோஷம் எனச் சொல்வதெல்லாமே குறைக்கப்பட்ட, அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட வேதனைகள் மட்டுமே.
இது உணரப்படாத வரை... ஆனந்தத்தைப் பற்றி கற்பனைக் கூடச் செய்ய முடியாது.
ஆனந்தம் என்பது இடைவெளி இல்லாதது. துன்பம்
என்பது நிரந்தரமான நிரந்தரமின்மை. சில
இடைவெளிகளைக் கொண்டது. அந்த, இடைவெளிகளே
சந்தோஷம். இது தாண்டப்பட வேண்டியது.
துன்பம் உலக இயல்பு - அது உங்கள் மனதின் இயல்பு.
ஆனந்தம் பிரபஞ்ச இயல்பு - அது உங்களின் ஆத்மாவின் இயல்பு.
வாழ்வில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூடப் போதும்... அது நிரந்தரமாகியிருக்கும். ஏனென்றால் அது நிரந்தரமானது.