முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
காலம் காலமாகத் தம்முடைய கருத்துக்களை உலகத்திற்குக் கொடுக்க நினைக்கும் ஆன்மீகவாதிகள் எல்லோருமே இளைஞர்களைத்தான், குறிப்பாக, மனதில் இளமைத் துணிவு நிறைந்தவர்களைத்தான் அணுகுகின்றார்கள்.
ஏனென்றால் இளைஞர்களுக்கு மட்டும்தான் எதையும் சோதித்துப்பார்க்க வேண்டும் என்கின்ற ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இளமையில் நமது இரத்தத்தில் நிலவும் சூட்டிற்குத்தான் எந்த ஒரு உண்மையையும் சோதித்து பார்க்கக் கூடிய, எந்த ஒரு உண்மையையும் வாழ்விலே புடம்போட்டுப் பார்க்கக் கூடிய தன்மையும் உண்டு.
காரணம் புதிய புதிய வாழ்க்கை முறையைப் பற்றி யோசிப்பதும், எந்த ஒரு விஷயமும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டால் அதைக் கடைப்பிடித்துப் பார்த்து (அ) சோதித்துப் பார்த்து, அதைத் தனது வாழ்க்கையில் உணர முயற்சிப்பதும் இளைஞர்களால் மட்டும்தான் முடிகிறது. உலகம் முழுவதும் இதுவரை நடந்திருக்கும் எல்லாப் புரட்சிகளும், எல்லா மாறுதல்களும் எல்லாமும் இளைஞர்களை மையமாக வைத்தே நடந்திருக்கின்றன. மீண்டும், மீண்டும் நமது ஆன்மீகவாதிகளாகட்டும் (அ) சமுதாயத்தின் தலைவர்களாகட்டும் இளைஞர்களைச் சார்ந்தேயிருக்கின்றார்கள். இளைஞர்களையே அழைக்கின்றார்கள்.
காரணம் "இளமை என்பது தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதற்கும், தன்னுடைய வாழ்க்கையை ஆழ்ந்து யோசிப்பதற்குமான ஒரு அற்புதமான பருவம்" என்பதனால்தான்.
ஆன்மீக ரீதியாகவும், சக்தி ரீதியாகவும் கூட இளமை மிகப்பெரிய இடத்தை வகிக்கின்றது. வாழ்க்கையினுடைய சாரம் என்று சொன்னோமென்றாலே அது இளமைதான். இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த இளமைக்காலம் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டி இந்தப் புத்தகம்.
- இப்படிக்கு நித்யானந்தத்தில், தியானபீடம் சேரிடபுள் டிரஸ்ட்