நீ மாளிகையில் மகிழ வேண்டியவன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வா! மனிதா வா!
உன் வாழ்க்கை
உன்னுடையதுதான்
வா!
வாழ்ந்து பார்.
தட்டுத் தடுமாறித்
திரட்டும் அனுபவங்களில்
கட்டும்
ஞான மாளிகையில்
வாழ்ந்து பார்...
தேங்கிக் கிடக்கும்
குட்டையல்ல நீ
ஒரே மாதிரியான
வாழ்வு வாழ!
துள்ளியோடும்
நதி நீர் நீ!
விதம் விதமாய்
வாழ வேண்டும்.
வாழ்வை அனுபவிக்காது
வீடில்லா அனாதையாய்
திரியாதே! உள்ளுலகில்.
மாளிகையில் மகிழவேண்டியவன்
நீ.
நீதி நெறியில்
வரையறை விதித்து - உன்
வாழ்வை நெறித்து விடாதே.
நீதி நெறிகள்
இடத்துக்கு இடம்
மனிதனுக்கு மனிதன்
குலத்துக்குக் குலம்
உருமாறி
நிறம் மாறி
நம்மை நெறிக்கும்
பச்சோந்திகள்!
உனக்கும்
மற்றவருக்கும்
சந்தோஷமளிக்குமெல்லாமே
- நீதி!
உனக்கும்
மற்றவருக்கும்
துக்கமளிக்குமெல்லாமே
- அநீதி!
இவற்றை மீறிய நீதியில்லை.
நீ கட்டுப்பாடுகளுக்குள்
கட்டுப்பட்டு விடாதே!
கட்டுப்பட்டால் - வாழ்க்கை
கடிக்க ஆரம்பித்து விடும்.
கவனமாக
கவனித்து
கட்டவிழ்!
கட்டுக்கடங்காத
காளை
கட்டுப்பட்டுக் கிடக்கிறது உன்னுள்.
வாழ்க்கையின்
வர்ண ஜாலங்களுக்குள் குதி!
வித
விதமான அனுபவங்கள் உன்னை
வளர்க்கவே
வசித்துக் கொண்டிருக்கிறது.
புதுப்புது அனுபவங்கள்
புது மனிதனாகப் பொலிவுறச் செய்யும்,
புதிதாக உருவான அகமாளிகையில்
உன்னை!
