பலவீனங்களெல்லாம் பலமாகும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்களின் பலவீனங்கள் உங்களின் பலத்திற்கான மூலதனம்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமாயிருந்தாலும் உண்மையே!
எல்லோருக்குமே 'காய்ச்சல் வரக்கூடாது' என்று ஆசை.
எல்லோருமே தோல்விகள் இல்லாத வாழ்க்கைக்கே ஆசைப்படுகிறார்கள்.
யாருமே சண்டை சச்சரவுகளை விரும்புவதேயில்லை.
ஆனால் இவை உங்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்றன.
எழுத்தாளர் ஒருவர் ஜென் ஞானியிடம் கேட்டார், "ஞானமடைந்து விட்டால் ஒருவருடைய எல்லாப் பிரச்சனைகளுமே தீர்ந்து விடுமா? அவரின் எல்லாக் குறைகளுமே நிறைகளாகி விடுமா?"
அப்போது அவரிடம், "எல்லாப் பிரச்சனைகளும் சரியாகிவிட வேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிட வேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை", என்று ஞானி சொன்னதும்,
"ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்சனையும் சரியாகாதா?" என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்.
"பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்சனைகளோடும் வாழ்வதற்குதான் ஞானம் தேவை.
எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள் கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை."

> "பிரச்சனைகளே
> இல்லாமல்
> வாழ்வதற்கு ஞானம்
> தேவையில்லை.
> எல்லா
> பிரச்சனைகளோடும்
> வாழ்வதற்குதான்
> ஞானம் தேவை.
வரலாற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்சொன்ன ஜென் கதையின் ஆழமான தாத்பரியம் புரிய வரும்.
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு தியான சத்சங்கத்தில் குறிப்பிட்டதை இங்கு குறிப்பட விரும்புகிறோம்.
"10 வயது குழந்தைக்கு 10ஆம் வகுப்பு புத்தகம் புதிராய் இருக்கும்.
காரணம், புரியாத எதையும் 'புதிர்' என்று மனம் மாற்றிக் காட்டும்.
சுதந்திரப் பறவையாய் சுற்றித் திரியும் இளம் உள்ளத்திற்கு குடும்பம், வீடு, தொழில், சமுதாயம் என்ற எல்லாமே எதிர்காலத்தில் வர இருக்கும் பெரிய பொறுப்பாய் தெரியும். எதிர்காலம் பயமாயிருக்கும். காரணம், புதிதான எதையும் பயம் என்று மனம் மாற்றிக் காட்டும்.
'எனது வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்வேன்' என்று வாழ ஆரம்பித்தவர்களுக்கு, தங்களின் விருப்பப்படி முழுமையாய் வாழ முடியாத போது தங்களிடம் பல குறைகள் இருப்பதாகத் தெரியும்.
காரணம், 'இயலாமைகளைத்தான் குறைகள்' என்று மனம் மாற்றிக் காட்டும்.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு மனிதருடைய வாழ்விலும் குறைகள், பயங்கள், புதிர்கள் இல்லவே இல்லை. மனத்தால் மாற்றிக் காட்டப்படும் மாயங்கள்தான் இவை.
இதைச்சொல்லி முடித்ததும் மாணவரொருவர் இப்படிக் கேட்டார், "மாயமானாலும், நிஜமானாலும் இவைதான் எங்களின் பிரச்சனைகளுடைய பெரும்பகுதியாக இருக்கின்றது. எப்படி விடுபடுவது?” என்று என்னிடம் கேட்டபோது, அவரிடம் சொன்ன பதிலை இங்கு குறிப்பிடுகிறோம்.