நீங்களே புது மனிதர்களாவீர்கள்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அடிக்கடி மனம் சோர்வடைந்து விடுகின்றதா?
நிம்மதி திடீர் திடீரெனப் பறிபோய் விடுகிறதா?
எப்போதும் கலக்கமாயிருக்கிறதா?
கவலையை விடுங்கள். இங்கே தீர்வு இருக்கின்றது.
ஒரு சின்னக் கதை:-
அந்த மன்னரின் ஆட்சியில் மக்கள் எல்லோரும் மிகவும் ஆனந்தமாக இருந்தார்கள். வரிச் சுமை இல்லை. திருட்டு பயம் இல்லை. அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். மக்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார்கள்.
அந்த ஊருக்கு வெளியே ஜென் ஞானி ஒருவர் மலையடிவாரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். ‘அவரிடம் செல்வோருக்கெல்லாம் குறைகள் தீருகின்றன. புதுத் தெளிவு பெறுகின்றார்கள்’ என்ற செய்தியைக் கேள்விப்பட்ட மன்னர் ஜென் ஞானியைப் பார்க்கப் புறப்பட்டார்.
"எல்லோரையும் எந்தக் குறையுமில்லாமல் வாழவைக்கும் மன்னருக்கு என்ன குறை இருக்க முடியும்?" என்று உடன் வந்த தளபதி யோசித்துக்கொண்டே வந்தார்.
மன்னரை அன்போடு வரவேற்றார் குரு. வெகு கரிசனத்தோடு அவரின் மனக்குறைகளைக் கேட்க ஆரம்பித்தார்.
"மக்கள் அவர்களின் வீடுகளில் சண்டைச் சச்சரவுகள் இல்லாமல் இருக்கின்றார்களா?"
"நல்ல அமைதியோடும், மிகுந்த சந்தோஷத்தோடும் இருக்கின்றார்கள் குருவே."

எல்லாம்
தேவைக்கு
அதிகமாகவே
இருக்கின்றது.
ஒரு குறையும்
இல்லை
"மும்மாரி மழை பெய்கின்றதா? நாட்டில் போதுமான அளவு செல்வம் இருக்கிறதா?"
"அதெல்லாம் தேவைக்கதிகமாகவே இருக்கின்றது. ஒரு குறையும் இல்லை"
"அண்டை நாட்டு அரசர்களோடு உறவு எப்படியிருக்கின்றது?"
"எல்லோரும் நண்பர்களே"
"அப்படியென்றால் வேறு என்ன குறை உங்களிடம் இருக்கிறது?"
"நாடே நிம்மதியாயிருக்கின்றது. ஆனால் என்னால்தான் நிம்மதியாய் இருக்கவே முடியவில்லை. ஒருவித கலக்கம் இருந்து கொண்டேயிருக்கின்றது"
"இதிலிருந்து வெளிவர விரும்புகிறீர்களா?"
"ஆம்"
"சரி, இந்த நாட்டை என்னிடம் கொடுத்துவிடுங்கள்"
இந்த பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத மன்னர், மிகவும் ஆச்சரியப்பட்டார்.
"அப்படியா! நீங்களே இந்த நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார் மன்னர்.
“சரி, நாட்டை என்னிடம் தந்துவிட்டீர்கள், இப்போது நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்?” என்று அமைதியாகக் கேட்டார்.
“கைச் செலவுக்கு கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு எங்காவது சென்றுவிடுவேன்” என்றார் மன்னர் தயக்கம் சிறிதும் இல்லாமல்.
“இப்போது நாடே என்னுடையது. இதிலிருந்து பொருளை எடுக்க உங்களுக்கு எந்த விதத்தில் உரிமை இருக்கிறது?” என்று மன்னரைக் குரு கேட்டார்.
சற்றே திகைத்த மன்னர், “நீங்கள் சொல்வதும் சரிதான். நான் இப்படியே புறப்படுகின்றேன்” என்றார்.
“சரி, எங்கே போவீர்கள்?” ஜென் குரு அந்த மன்னரை மீண்டும் மீண்டும் வெவ்வேறு கேள்விகளால், அவரை நிம்மதி நோக்கி, நிம்மதியுணர்வு நோக்கி நகர்த்திக்கொண்டே இருந்தார்.
“எங்காவது போய் ஏதாவது வேலையைச் செய்து, புது வாழ்வை ஆரம்பிக்க வேண்டும்” என்றார் எதற்கும் தயாராயிருந்த மன்னர்.
“அந்த வேலையை என்னிடமே செய்யலாமே?” என்றார் ஜென் குரு.
“என்ன வேலை?” என்று ஆர்வத்தோடு மன்னர் கேட்டதற்கு, “என் பிரதிநிதியாக இருந்து என்னுடைய நாட்டை இன்றிலிருந்து அரசாளுங்கள்.
இந்த அரசர்பணிக்கு மூன்று வேளை உணவும், தங்குவதற்கு ராஜ சௌகரியத்தையும், ஊதியமாக அரண்மனையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
எனக்கு வசதிப்படும்போது அங்கு வந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொள்கிறேன். அதுவரை பொறுப்பாக நாட்டைப் பராமரித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். புரிந்ததா?” என்றார்.
என் பிரதிநிதியாக இருந்து என்னுடைய நாட்டை இன்றிலிருந்து அரசாளுங்கள்.
"சரி" என்று பொறுப்புணர்வோடு தலையாட்டிய மன்னர், புதுத்தெம்போடு வெளியில் வந்தார்.
‘உள்ளே என்ன நடந்தது?' என்று தெரியாத அவரின் தளபதிகள் புதுத்தெளிவோடு வரும் மன்னரைச் சந்தோஷத்தோடு பார்த்தார்கள்.
மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.

குருவைப் பார்த்த
அன்றிலிருந்து
இன்றுவரை மன்னர்
ஒவ்வொரு நாளும்
உற்சாகமாகவே,
வலம் வந்து
கொண்டிருந்தார்.
குருவைப் பார்த்த அன்றிலிருந்து இன்றுவரை மன்னர் ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவே, வலம் வந்து கொண்டிருந்தார்.
திடீரென்று ஒருநாள், அரசவைக்கு குரு வந்தார். ஓடோடி வந்து மன்னர் வரவேற்றார். சிம்மாசனத்தில் அமர்ந்த குரு,
"என்ன மன்னா நாடு எப்படி இருக்கிறது? என்று கேட்டுவிட்டு...
ஆஹா, எல்லாம் சரியாக இருக்கின்றதே" என்றார்.
கணக்கு வழக்குகளைக் கொண்டுவர எழுந்த மன்னரை கையமர்த்தித் தடுத்தார் குரு.
"கணக்குகள் இருக்கட்டும், உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது?"
"நிம்மதியாய் இருக்கின்றது" என்றார் மன்னர்.
"ஏன்?" என்று குருநாதர் கேட்டார்.
இந்தக் கேள்விக்கு அரசரால் பதில் சொல்ல முடியவில்லை.
உங்களுக்குப் பதில் தெரிகிறதா?
இந்தப் பதிலைத் தெரிந்துக்கொண்டால் உங்களின் வாழ்விலும் புதுத்தெம்பு பூக்கும். புதுத்தெளிவு பிறக்கும். புது மனிதராவீர்கள்.
அந்தப் பதில்தான் உங்களுக்கான ஆத்ம தியானம்.
ஆத்ம தியானம்
ஜென் குரு மன்னரிடம் கேட்டார்.
“என்னிடம் நாட்டைத் தருவதற்கு முன் நீங்கள் செய்த ஆட்சிக்கும், இம்மூன்று வருட ஆட்சிக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா?”
“இல்லை. ஒரே விதமான ஆட்சிதான் செய்தேன்” என்று திகைப்போடு மன்னர் பேசினார்.
“அதே அரசாட்சி, அதே அதிகாரிகள், அதே நாடு, அதே மக்கள்.
ஆனால் அப்போது இல்லாத நிம்மதி இப்போது உங்களிடம் இருக்கிறதே இது எப்படி?
இந்த நிம்மதி அப்போது இல்லாதுபோனது ஏன்?”
“ஏன்???” என்று தனக்குள்ளேயே வெகு வியப்போடு மன்னர் பதில் தேடினார்.
மன்னருக்கு குரு விளக்கிய பதிலைப் படிப்பதே தியானம்தான்.
“அப்போது, ‘இது உங்களுடையது’ என்ற உணர்வே உங்கள் நிம்மதியை உறிஞ்சி விட்டது.
இப்போது இது இன்னொருவருடையது என்ற உணர்வும், இதைப் பார்த்துக்கொள்வது நம் பாக்கியம் எனும் நன்றியுணர்வும், எப்போது அவர் வந்து கேட்டாலும், இதை நான் சரியாக ஒப்படைக்க வேண்டுமே... என்ற பொறுப்புணர்வும் ஒன்றாய் சேர நிம்மதி உங்களுக்குள்ளேயே பொங்க ஆரம்பித்துவிட்டது. நீங்கள் புது மனிதராக மலர ஆரம்பித்து விட்டீர்கள்.”
“வேலை செய்யும் பொறுப்பு நமது, பலனைப் பற்றிய கவலை, நமதல்ல.. எனும் தெளிவு பிறப்பதுதான் உங்களுக்குப் புதுப்பிறப்பைத் தந்தது. ‘எனது’, எப்போது ‘எனதல்ல’ என்று மாறுகிறதோ அப்போதே கலக்கம் கரைந்துவிடும்.
“நீங்கள் நிம்மதியை அடைந்ததின் ரகசியம் இதுதான்” என்றார்.
இந்தக் கதையில் இருந்து, புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக உயர்ந்த தியான சூத்திரம் ‘எனது’ என்பது ‘எனதல்ல’ என்று மாறியதால் அவர் எதையும் இழக்கவில்லை. மாறாக அவர் இழந்த பலவற்றைப் பெற்றுக்கொண்டார். வாழ்வை முழுமையாக வாழ ஆரம்பித்தார்.
“நம் உடலே நம்முடையது அல்ல. இயற்கை தந்தது.
நாம் சுவாசிக்கும் காற்று நமதல்ல. இயற்கை சக்தி தந்தது.
நம் வாழ்வும் நமதல்ல. அது இயற்கையைப் படைத்த இறைசக்தி தந்தது”.
இவையெல்லாம் நமதல்ல எனும்போது, வேறு எதுதான் நமதாக இருக்க முடியும்? எல்லாமே பிரபஞ்சத்தைப் படைத்த இறைவனின் சொத்துதான். எல்லாமே நாம் வேண்டாமல் பெற்ற வரங்கள் தான், பரிசுகள் தான்.
இந்த நிமிடம் நீங்கள் அனுபவிக்கும் மூச்சிலிருந்து, வீடுவரை எல்லாமே எனதல்ல... அவையெல்லாமே எனக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் என்ற நன்றியுணர்வோடும், என்னிடம் இருக்கும் வரை இந்த உடலைக்கூட நன்றாய்ப் பார்த்துக்கொள்வேன். உடல் கூட எனக்குத் தரப்பட்ட பரிசுதான் இதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்...” என்ற பொறுப்புணர்வோடும் வாழ ஆரம்பியுங்கள்.
அதே வாழ்வில் வேறு எதையுமே மாற்றாமல் புதுத்தெம்பு பாய்வதைக் காண்பீர்கள்.
‘எனது’ எனும் அகங்காரப்பிடிப்புக் கழன்று, ‘எனதல்ல’ எனும் புதுத்தெளிவு பிறந்து எல்லாமே இறைசொத்து. நான் அதை அனுபவிக்கும் ஆனந்தமயமான ஜீவன் என்ற புத்துணர்வு பாயும்.
நீங்களே புது மனிதராவீர்கள்!
