முன்னுரை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஜீவனையே சிவனாக்கும் சாரம்
இமயமலையைத் தேடி நீங்கள் போவது தவம்.
இமயமலையே உங்களைத் தேடி வருவது தீக்ஷை.
ஆத்மாவைத் திறக்காமலேயே இறுக்கமாய் இருப்பவர்தான் இமயம் தேட வேண்டும். 'இயமம்!' 'நியமம்!' என வாட வேண்டும்.
நேரடியாக ஆத்மாவைத் திறக்க தயாராயிருப்பவர் எல்லா வகையான யோகங்களையும் தன் வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும் அனுபவிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுவார்.
அதனால்தான், "ஆனந்தம் செல்வத்தை ஈர்க்கும்" என்று சொல்வதுண்டு.
யோகங்களுக்கெல்லாம் யோகம், 'ஜீவனையே தேவனாக்குவதுதான்', 'அந்த ஜீவனையே சிவனாக்குவதுதான்'. அதற்கான சத்தியங்களை ஒருவர் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முறையும், அவருக்குள் தீக்ஷை நிகழ்கிறது.
பல தவங்களுக்கு பிறகு ஒரு தீக்ஷை ஒருவருக்குள் நிகழலாம். இது தனிமனித முயற்சியால் நிகழ்வது.
ஆனால் ஒரு ஞானியிடமிருந்து ஒருவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு சத்தியமுமே, ஒவ்வொரு தனித்தனி தீக்ஷை.
பல தவங்களின் சாரத்தை இருக்குமிடத்திலேயே ஒருவர் பெறுவதைத்தான் 'இமயமலையே உங்களை தேடிவரும் அருஞ்செயல்' என்று சொல்கிறார்கள்.
கோழி முட்டைக்குள் இருக்கும் திரவம் என்ன தவம் செய்தாலும் அதனால் கோழி குஞ்சாகிவிட முடியாது.
நடக்க வேண்டியதெல்லாம் இதுதான்... சில நாட்கள் தொடர்ந்து கோழி அந்த முட்டையின் மீது அமைதியாக அமர்ந்திருந்தாலே போதும்.
என்ன ஆச்சர்யம்! தொடர்ந்து சில நாட்கள் கோழி அமர்ந்திருக்கின்றது. முட்டைக்குள் இருந்த திரவம் கோழி குஞ்சாகிவிடுகிறது.
திரவம், கோழி குஞ்சாக உருமாறியது, கோழியின் சூட்டினால் மட்டுமே நிகழ்ந்த அதிசயம். கோழியின் அருகாமை திரவத்தைக்கூட குஞ்சாக்கும் சக்தி வாய்ந்தது.
இப்போதெல்லாம் கோழியின் சூட்டைக்கூட விஞ்ஞான முயற்சியால் இயந்திரங்களின் உதவியினால் உருவாக்கிவிட முடிகிறது. அதே சூட்டை உருவாக்கி ஓராயிரம் முட்டைகளுக்குள் இருக்கும் கோழி குஞ்சுகளை ஒரே நேரத்தில் வெளியே எடுத்து வந்துவிடுகிறார்கள்.
ஆனால், இது மனிதன் விஷயத்தில் சாத்தியமா?
குருவின் அருகாமையால் இது சாத்தியமாகக்கூடிய ஒன்றே.
குருவின் சாந்நித்யத்தில் எந்த மனிதரும் ஜீவன் முக்தராக மலர்வதற்கு தேவையான சக்தி பொங்கிக்கொண்டே இருக்கும்.
எப்படிப்பட்ட மனிதனுக்குள்ளும் ஆனந்தத்தை பொங்க வைப்பது சாத்தியம்தான் என்றாலும், எல்லோருக்கும் இது சாத்தியமா?
இமயமலைகளின் குகைகளில் எங்கெங்கோ இருக்கும் குருமார்களை தேடிக் கண்டுபிடிப்பதென்பது இந்தக் காலத்தில் எந்த மனிதனுக்குதான் சாத்தியம்?
மக்கள் எல்லோரையும் இமயத்தை தேடச் சொல்வது தீர்வல்ல. அந்த இமயத்தை மக்களின் இதயத்தில் ஊற வைப்பதுதான் தீர்வு.
அதன் முதல் முயற்சிதான், "ஆத்மாவைத் திற... ஆனந்தம் பெருகட்டும்".
இமயமலையில் ஒரு அவதார புருஷரின் காலடியிலேயே நீங்கள் வாழ்ந்தால் என்ன சாரத்தை பெறுவீர்களோ, அதன் சாரம் "ஆத்மாவைத் திற... ஆனந்தம் பெருகட்டும்" எனும் இந்த தொடரின் ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் கரைந்திருக்கிறது.
சாரமில்லா வாழ்வில் இந்த சாரத்தை சேருங்கள்.
ஆத்மாவைத் திறக்க நீங்கள் தயாரானாலே போதும்... ஆனந்தத்தையே பொங்க வைக்கும் தியான சூத்திரங்கள் உங்களுக்காய் உள்ளே காத்திருக்கின்றன.
முட்டைக்குள்ளிருக்கும் திரவத்தைப்போல் உங்களுக்குள்கூட உணர்வுத்திரளாய் காத்துக்கொண்டிருக்கும் 'ஜீவன் முக்தியை' எப்போது வேண்டுமானாலும் குஞ்சு பொரிக்க வைக்கும் சக்தி படைத்தவை, சத்தியங்கள். இந்த சத்தியங்கள் உங்களை ஜீவன் முக்தராய் உருமாற்றும் சக்தி படைத்தவை.
முயற்சி செய்யுங்கள். மேற்சொன்ன அனுபவத்தை அனுபவமாகவே பெறுவது உங்களுக்கும் சாத்தியமே.
ஆனந்தமாக இருங்கள் பரமஹம்ஸ நித்யானந்தர்.