உங்களுக்கு உதவ காத்துக்கொண்டிருப்பவர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சென்னையில் தியான வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கும்போது, என்னிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார்கள்.
"முன்பு இந்தியாவில் நன்றாக இருந்த ஏகபத்தினி விரதத்துவம், இன்று தோல்வி அடைந்து விட்டதாக ஒரு சிலர் விமர்சிக்கின்றார்கள்.
ராமர், சீதை வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயம், இப்போது ஒத்துவராமல் போனதன் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.
அப்போது அவரிடம் சொன்னோம்...
"இந்தக் கேள்விக்கான பதிலை ஆழமாக யோசித்துப் பார்த்தால், ராமரும், சீதையும் இன்றைய குழந்தைகள் வளரும் கற்பனைகளின் அழுத்தம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் வளரவில்லை.
எந்தக்குழந்தைக்கும், அக்குழந்தையின் பெற்றோர்தான் முதல் கதாநாயகர்கள்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் எளிமையான, இனிமையான சமுதாயத்தில் வளர்ந்தார்கள். எல்லா பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் முதல் கதாநாயகன் அக்குழந்தைகளின் தந்தைதான். எல்லா ஆண்குழந்தைகளுக்கும் அக்குழந்தையின் முதல் கதாநாயகி, அவர்களின் தாய்தான். இது உளவியல் ரீதியான உண்மையும் கூட. சீதை பார்த்த ஒரே கதாநாயகன் ஜனகர்தான். சீதை வேறு
ஒருவரை ஹீரோவாகப் பார்க்க வாய்ப்பே கிடையாது. சீதைக்கு வேறு யாரையும் பற்றித் தெரியவும் தெரியாது.
ஜனகரோ 'மகாராஜா!'. வில்வித்தை போன்று பல திறமைகளை உடையவர். ராமருக்கும் வில்வித்தை உள்பட நிறைய திறமைகள் இருந்தது.
ஜனகருக்கும், ராமருக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை. ஜனகரைப் போலவே ராமரும் இருந்ததால், ராமரை சீதைக்கு உடனே பிடித்து விட்டது.

சீதையின் மனத்தில் உருவான வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு, நிஜத்துணையான ராமரோடு ஈர்ப்பு ஏற்படுத்திவிட்டது. கற்பனையின் எதிர்பார்ப்புக்கும், நிஜத் திற்கும் வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தது. எனவே கணவரே ஹீரோவாகத் தெரிந்தார்.
ராமர் பார்த்த கதாநாயகிகள் கைகேயி, கோசலைதான்.
இரண்டு பேரும் அரசகுமாரிகள். அழகானவர்கள். அன்பானவர்கள். சீதையும் அவர்களைப் போலவே, அழகாகவும் அன்பாகவும் இருந்ததால் ராமருக்கும் உடனே பிடித்து விட்டது.
ராமருக்குத் தன்னுடைய எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முழுமையாக பொருந்தக் கூடிய சீதையைத் தாண்டிய எதிர்பார்ப்புகள் இருக்காது. மனைவியே கதாநாயகியாகத் தெரிந்தாள்.
அந்தக் காலத்தில் மனிதர்களுடைய கற்பனைக்கும், அவர்கள் சந்தித்த நிஜ வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியோ, வேறுபாடோ இல்லை.
ஆனால், இப்போதோ நம் கற்பனைக்கும், உண்மைக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளி எதைக் கொண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது.
அதனால்தான் இன்று நம் சமூகத்தில் அன்று சாத்தியமாக இருந்த பல விஷயங்கள் இன்று சாத்தியமில்லாமல் இருக்கின்றது. நம் இந்தியக் கலாச்சாரம் பல இனிய அம்சங்களைக் கொண்டது. அதில் பலவற்றையும் இழந்ததால்தான் இன்று இவ்வளவு கஷ்டங்கள்.
இழந்தவற்றை மீண்டும் பெற்றாலேபோதும், நிஜமான சொர்க்கத்தைப் படைத்து விடலாம்" என்று சொல்லி முடித்தேன்.
ஆத்ம தியானம்
தாகத்தை உப்புத் தண்ணீரால் போக்க முடியாது.
ஒரு பலவீனத்தை இன்னொரு பலவீனத்தால் சரிசெய்ய முடியாது.
உங்கள் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு உங்களைப் பலர் வீழ்த்தி விடுகிறார்கள். 'உங்களின் பலவீனமான இடம் எது? என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
அந்தக் கலையைத் தெரிந்து சரியாக தேவையற்ற கற்பனைகளை வார்த்தைகளின் மூலமாகவும், வர்ணனைகளின் மூலமாகவும் நம்முள் இவர்கள் தூவி விடுகிறார்கள். நேரடியாக நம்மைத் தாக்குபவர்களிடமிருந்து நம்மை எளிதில் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால், நமக்குள் நமக்கே தெரியாமல் அவர்களின் இஷ்டப்படி நம்மை வளைக்க முயற்சி செய்பவர்களிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது கடினம்.
நம் பலவீனம் தெரிந்து நம்மைச் சுரண்டுபவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதே ஒரு தியானம்தான்.
நிஜத்துக்குப் பதிலாகக் கனவுகளை அனுபவிப்பது, அன்புக்குப் பதிலாக எதிர்பார்ப்புகளை அனுபவிப்பது, அமைதிக்குப் பதிலாக பரபரப்புகளை அனுபவிப்பது என்ற எல்லாமே தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக உப்பைத் தின்பதற்குச் சமம்.
உப்பைத் தின்றால் தாகம் தீருமா? தாகம் குறைவதற்குப் பதிலாக அது அதிகமாகுமல்லவா? அதுபோல், வாழ்க்கையில் எந்தத் திருப்தியும் ஏற்படுத்தாத அசாத்தியமான கற்பனைகளை வாங்கிச் சாப்பிடுவதால், மனக்குழப்பம்தான் அதிகமாகும், குறையாது.
உங்களின் அகங்காரத்தை வளர்க்கும் வார்த்தைகளைப் பேசுபவர்கள், உங்களுக்கு புகழாரம் பாடுபவர்கள், எப்போதும் உங்களுக்கு ஏதாவதொரு பரபரப்பூட்டும் செய்திகளைத் தந்து கொண்டே இருப்பவர்கள்தான் உங்களின் பலவீனம் அறிந்தவர்கள். இவர்களால்தான் எளிதில் உங்களை வீழ்த்த முடியும்.
இவரோடு பேசினால், இதைச் செய்தால் மனநிறைவு ஏற்படும் என்று வாழ்வில் சிலவற்றை நாம் தேர்வு செய்து வைத்திருப்போம்.
உங்களின் மனநிறைவுக்கான வாழ்வியல் வழிமுறைகளை ஆராய்ந்து பாருங்கள். நிஜமாகவே அவை உங்களுக்கு மனநிறைவைத் தருகின்றனவா? பேசும்போது சின்ன மனநிறைவைத் தந்து, ஒரு செயலைச் செய்யும்போது தற்காலிக மனநிம்மதியைத் தந்தபிறகு குழப்பத்தையும், கஷ்டங்களையும் அடிக்கடி சந்தித்தீர்கள் என்றால் நன்றாய் தெரிந்து கொள்ளுங்கள்... இப்படிப்பட்ட செயல்கள்தான் தாகத்திற்கு உப்புத் தண்ணீர் குடிப்பது.
குழப்பங்களையும், கஷ்டங்களையும் தாண்டுவதற்கான தீர்வுகளை உங்களுக்குத் தருபவர்கள்தான் உங்களின் பலவீனங்களை அறிந்து உங்களை உயர்த்துபவர்கள். அப்படியில்லாமல், எப்போதும் உங்களின் அந்தந்தக் கஷ்டங்களிலிருந்து தற்காலிகமாக மட்டுமே திருப்புபவர்கள், நிச்சயம் உங்களுக்கு உதவுபவர்கள் அல்ல.
தேவையற்ற கனவுகளிலிருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டாலே போதும்.
உங்களைச் சுரண்ட காத்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு உதவக் காத்துக் கொண்டிருக்கும் ஜீவன் முக்தர்களைக் கண்டுபிடித்து விடலாம்.
