KAILASA Library/ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்/நீங்கள் எப்படியிருந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லைSign in
ஆன்மாவைத் திற ஆனந்தம் பெருகட்டும்

நீங்கள் எப்படியிருந்தாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda

பூமியில் நீங்கள் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பூத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்.

இன்று வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதற்காக சிறுதுளியும் சஞ்சலப்பட வேண்டியதில்லை. செல்ல வேண்டிய இலக்கு நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மூச்சிலும் ஒரு படி வளர்கிறீர்கள். முன்னேறுகின்றீர்கள்.

ஒரு ஜென் ஞானியிடம், "உங்களின் குரு யார்?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு

அவரின் பதில் இதுவாக இருக்கும் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.

ஞானி, "நதி" என்றார்.

"நதி எப்படி குருவாக இருக்க முடியும்?" என்று அவரிடம் மீண்டும் கேட்டதற்கு,

"அது என்னிடம் பேசியதே," என்றார்.

கேள்வி கேட்டவர் ஆச்சரியத்தோடு, "என்ன பேசியது?" என்று கேட்டார்.

அதற்கு ஞானி சொன்னார்...

நதி சொன்னது, "எந்த வழியில் திரும்பினாலும், எவ்வளவு தூரம் ஓடினாலும், நான் என் வீட்டை நோக்கித்தான் செல்கிறேன். எனவேதான் குஷியாக ஓடுகிறேன். சலசலவென பாடிக்கொண்டே ஓடுகிறேன்..."

உடனே எனக்குள்ளும் அது நிகழ்ந்தது.

என் வீட்டை அடைந்துவிட்டேன்.

portrait

வாழ்வின் எந்த
உச்சத்திற்குச்
சென்றாலும்,
எவ்வளவு
நீச்சத்திற்குச்
சென்றாலும்
சஞ்சலப்பட
வேண்டியதில்லை.

"என் குருவிற்கு நன்றி," என்றார்.

வாழ்வின் எந்த உச்சத்திற்குச் சென்றாலும், எவ்வளவு நீச்சத்திற்குச் சென்றாலும் சஞ்சலப்பட வேண்டியதில்லை.

இதை மீறி ஒருவர் சஞ்சலப்பட்டால்கூட அவர் முன்னேறிக் கொண்டேதான் இருக்கின்றார்.

நீங்கள் சஞ்சலப்படுகின்றீர்கள், நீங்கள் வருத்தப்படுகின்றீர்கள் என்பதற்காக உங்களுக்கு வயதாகாமல் இருக்கப்போவதில்லை.

இப்போது நீங்கள் ஆனந்தமாக இல்லை என்பதற்காக, உங்களைச் சுற்றி இயங்கும் உலகம் நின்றுவிடப்போவதில்லை.

உங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என்று வாழ்க்கையே வெறுத்துவிட்டால்கூட உங்களுக்குள் ஓடும் இரத்தமும், உங்களைச் சுற்றி ஓடும் வாழ்க்கையும் உற்சாகமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கும்.

ஒருவர் இந்த உலகத்தில், "நான் அனுபவிப்பதற்கு எதுவுமே இல்லை, யாரையும் நம்ப முடியவில்லை" என்று தன்னை முழுமையாகச் சுருக்கிக் கொண்டால்கூட அவரின் உணர்வு விரிந்துகொண்டேதான் இருக்கும். அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள் அனைத்தும் அவருக்குள் பதிந்து கொண்டே இருக்கும். அவர் மிக மெதுவாகவாவது வளர்ந்து கொண்டேதான் இருப்பார்.

இந்த வளர்ச்சி ஆமை வேகத்தில் நிகழ்ந்தால் ஒவ்வொரு பிறவியாக எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். வாழ்வு நீண்டு விடும்.

இதே வளர்ச்சியைக் குதிரை வேகத்தில் நிகழ்த்தினால், பல பிறவிகள் மூலமாக அடைய வேண்டிய அனுபவங்களை ஒரே பிறவியில் வாழ்ந்து அனுபவித்துத் தாண்டிவிடலாம்.

குதிரை வேகத்தில் வளர்ச்சியை நீங்களே நிகழ்த்துவதைத்தான் ஜீவன் முக்த வாழ்வு என்றழைக்கிறோம்.

இதற்கு நேரடியாய் உதவும் தியானம்தான் இந்த ஆத்ம தியானம்

ஆத்ம தியானம்

"ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காதா?" எனப் பாலைவனத்தில் வழி தவறிய பயணி ஏங்கினார்.

எவ்வளவு தூரம் பார்த்தாலும் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. இருந்தாலும் முழு முயற்சியோடு எதிரே இருந்த மலையைக் கடப்பதற்காக நடக்க ஆரம்பித்தார்.

ஒரு துளி நீர் கூட எங்கும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

இருந்தாலும், ஆழ்ந்த தேடுதலோடு, "நாம் கண்டுபிடிக்கலாம்" என்ற புது உத்வேகத்தோடு மலையின் உச்சிவரை வந்தவர் தடுக்கி விழுந்தார். எழுவதற்கு சக்திகூட அவரிடமில்லை.

கண்கள் சொருகியது. உலகமே இருண்டது.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டார்.

அப்போது எல்லாப் பக்கங்களிலும் ஒரு கம்பீரமான அமைதி ஆட்சி செய்வதை உணர்ந்தார்.

கம்பீரமான அமைதியில் எல்லாச் சத்தங்களும் தெளிவாய்க் கேட்டது. பாலைவனக் காற்று, கழுகுகள் சத்தம் என்று மாறி மாறிக் கேட்ட சத்தங்களுக்கு நடுவே அந்த மெல்லிய ஓசை கேட்டது.

மெல்லிய ஓசை அவருக்குள் புது உற்சாகத்தைத் தந்தது. சோர்ந்து, அசந்து போயிருந்த உடலை எழுப்பும் சக்தி அவருள்ளிருந்து பொங்கி எழுந்தது.

அந்த ஓசை வந்த திசையை நோக்கி மெல்ல நகர்ந்தார்.

அந்த 'சலசல' ஓசை வந்த இடத்தை அடைந்தார். அது அவரின் மொத்த தாகத்தையும் தீர்த்துவிடும் குளிர்ந்த நீரோடை.

அது சல சல வென இசையோடு ஓடிக்கொண்டிருந்தது.

அதைக் குடித்தார். அதில் குதித்தார். அதைக் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் முடிந்தது... என்ற நிலையைத் தொட்ட அவரின் வாழ்வு புதிதாய் பூத்தது. கொண்டாடினார். நீரோடைக்குள்ளே ஆனந்தக் கூத்தாடினார்!

உங்களின் வாழ்வு எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதில் இருந்துகூட ஜீவன் முக்தியைப் பூக்க வைக்க முடியும்.

பக்தர் ஒருவர் என்னிடம் கேட்டார், "நீங்கள் என்ன செய்தாலும், உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் ஆனந்தமாகவே இருக்கின்றீர்கள். எங்களால் அது முடியவில்லையே... என்ன செய்தால் எங்களுக்கும் அது சாத்தியமாகும்? உங்களுக்கும் எங்களுக்குமுள்ள வித்தியாசம் என்ன?" என்று கேட்டார்.

அவரிடம் சொன்னோம், "இரண்டு கேள்விக்கும் பதில், என்ன செய்தாலும் அதில் இருக்கும் உற்சாகம்தான். (Intensity)"

உற்சாகம் என்பது வேறொன்றுமில்லை... இதுதான்.

முழு முயற்சியோடு, ஆழ்ந்த தேடுதலோடு எப்படியும் அடைந்து விடலாம் என்ற முயற்சியோடு வெளியுலகில் எப்படித் தேடுகின்றீர்களோ, அந்த மொத்த முயற்சி யையும் உள்நோக்கித் திருப்புங்கள்.

எதையோ அடைவதற்காக...

எதையோ சாதிப்பதற்காக...முயற்சித்தபோது உங்களுக்குள் எவ்வளவு சக்தி பொங்கியிருக்கும்? எவ்வளவு உற்சாகம் பொங்கியிருக்கும்? எப்படி உங்களின் ஒவ்வொரு மயிர்காலும் அதை அடைவதற்காகத் துடித்திருக்கும்? எப்படி உங்களின் ஒவ்வொரு எண்ணமும், உணர்வும் அதற்காகவே இயங்கியிருக்கும்?

இது மொத்தத்தையும் மேலெடுத்து வாருங்கள்.

வெளியுலக சாதனைக்காக பொங்கிய இந்த மொத்த உணர்வை உள்ளுலகிலேயும் எடுத்து வருவதைத்தான் உற்சாகம் என்கிறோம்.

சாதனை மட்டும்தான் பெரிய விஷயம் என்பதல்ல.

நாம் செய்யும் ஒவ்வொன்றையும், பொங்கும் உற்சாகத்திலிருந்து செய்யும்போது அது ஒவ்வொன்றுமே சாதனையாகும்.

இது நிகழும்போது என்ன நடந்தாலும், என்ன செய்தாலும் ஆனந்தமயமாய் இருக்கும் ஜீவன் முக்தராகியிருப்பீர்கள்.

என்ன செய்தாலும் உற்சாகத்தோடு செய்யுங்கள்.

உட்கார்ந்தால் கூட, தூங்கச் சென்றால் கூட, பேசினால்கூட, சிரித்தால்கூட உற்சாகத்தோடு செய்யுங்கள். உங்களின் வளர்ச்சி அதிவேகமாக நடப்பதை அனுபவமாகப் பார்ப்பீர்கள்.

எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது 'தியானம்.'

அதை மீண்டும் மீண்டும் வாழ்வில் எடுத்து வருவது 'ஞானம்.'

அதை அனுபவிப்பது 'ஆனந்தம்.'

அதிலேயே வாழ்வது 'ஜீவன் முக்தி.'

Portrait