கஷ்டங்கள் என்பதே இல்லை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
விநோதமான கோரிக்கை ஒன்று ஜென் ஞானியின் முன் வைக்கப்பட்டது.
"என்னை இந்தச் சிலந்தியிடமிருந்து காப்பாற்றுங்கள்" என தன் கோரிக்கையை வைத்தவரிடம் ஜென் ஞானி கேட்டார், "எந்தச் சிலந்தி?"
"அந்தச் சிலந்தி நான் அறையில் தனியாய் இருக்கும்பொழுது மட்டுமே வருகின்றது. அது என்னைப் பார்த்ததும் சில நிமிடங்களில் என் உள்ளங்கையளவிற்குப் பெரிதாகி விடுகிறது. அடுத்த சில நிமிடங்களில் என் உடலளவுக்குப் பெரிதாகின்றது. அடுத்த சில நிமிடங்களில் 'மள மள' வென்று பெரிதாகி நான் இருக்கும் அறையில் மூச்சுத் திணறும் அளவிற்குப் பெரிதாகிவிடுகின்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சுவிட முடியாமல் நான் பீதியுற்று அலற ஆரம்பிக்கும் பொழுது அது அங்கேயிருந்து ஓடி விடுகின்றது. அடுத்த சில நிமிடங்களில் நான் அந்த அறையை விட்டு ஓடிவிடுவேன்.
அப்படி ஓடாவிட்டால் மீண்டும் அது அங்கு வந்துவிடும். இது தினம் தினம் என்னை உலுக்குகிறது. அந்தச் சிலந்தி வராமல் இருக்க ஏதாவது செய்ய முடியுமா?"
ஜென் ஞானி, "வராமல் இருக்கச் செய்வது அல்ல. அதைக் கொன்றேவிடலாம்" என்றார்.
“அப்படியா!” என உற்சாகத்தோடு கேட்டவரின் கையில் ஒரு சாக்பீஸைக் கொடுத்தார் ஜென் ஞானி.
“என்ன இது? அந்த ராட்சத சிலந்தியைக் கொல்வதற்கு இந்த சாக்பீஸ் எந்த வகையில் உதவும்?” எனக் கேட்ட போது, ஜென் ஞானி சொன்னார் “அதைச் சொல்வதற்கு முன்பு நீங்கள் ஒரே ஒரு வேலை செய்ய வேண்டும். இப்போது இந்த அறையில் உங்களை மட்டும் தனியாக விட்டுச் செல்கின்றேன்.

> கஷ்டம் என்ற
> ஒன்றோ,
> பிரச்சனை என்ற
> ஒன்றோ இந்தப்
> பிரபஞ்சத்தில்
> இல்லை.
அந்தச் சிலந்தி வந்ததும் அது அறையளவிற்கு பெரிதாக வளர்வதற்கு முன்பே அதன் மேல் சாக்பீஸால் குறியிட்டு விட்டு என்னைக் கூப்பிடுங்கள். மீதத்தை நான் பார்த்துக் கொள்கின்றேன்” எனச் சொன்னார்.
அதே போல் அந்தத் தனி அறையிலிருந்தவர் அடுத்த சில நிமிடங்களில் அலறினார்,
“ஐய்யோ , என்னை இந்த ராட்சத சிலந்தியிடமிருந்து காப்பாற்றுங்கள்!.
என்னால் மூச்சுக் கூட விடமுடியவில்லையே...”
உடனே அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற ஜென் ஞானி கேட்ட முதல் கேள்வி, “நான் சொன்னபடி அந்தச் சிலந்தியின் மேல் குறியீடு வரைந்தீர்களா?” “ஆம்” என்றார்.
“எங்கே காண்பி பார்ப்போம்?” என ஜென் ஞானி கேட்டதும் அவர் குழம்பிப் போய் சுற்றும் முற்றும் சிலந்தியைத் தேடினார். அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜென் ஞானி கடைசியாக, “இதோ கண்டுபிடித்துவிட்டேன். இங்கேதான் இருக்கிறது” என்று சொல்லி தன் ஆள்காட்டி விரலைச் சுட்டிக் காண்பித்தார்.
அவர் சுட்டிக் காண்பித்த திசையில் சிலந்தி இல்லை. வினோதமான கோரிக்கையை வைத்தவரின் வயிறுதான் இருந்தது. “சிலந்தியின் வயிற்றில் குறித்த குறியீடு தன்னுடைய வயிற்றில் இருப்பது எப்படி?” என ஆச்சரியத்தோடு அவர் யோசித்தார். ஜென் ஞானி சொன்னார், “இப்போது தெரிகின்றதா? சிலந்தி எங்கேயிருக்கின்றது என்று?”
இல்லாத சிலந்தியை இருப்பதாய்க் காண்பித்தது தன் மனக்கோளாறுதான் என்பது புரிந்ததும் சிரிக்க ஆரம்பித்தார். அதற்கு அப்புறம் அந்தச் சிலந்தி வரவேயில்லை.
மனக்கோளாறுகள்தான் மற்றமனிதர்களின் இயல்பான நடவடிக்கைகளைக் கூட கோளாறுகளாகக் காட்டுகின்றது.
பச்சைக் கண்ணாடி அணிந்தவர், “ஏன் எல்லாம் இப்படி பச்சை பச்சையாக இருக்கிறது?” எனக் கேட்பது போலத்தான் மனிதர்களின் புலம்பல் எல்லாம்.
ஒருமுறை பேராசிரியர் ஒருவர், “இன்றைய உலகம் மிகவும் மோசமாக இருக்கிறது. இதை மாற்ற முடியுமா? இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.
அப்போது சொன்னேன், “நிஜமாகவே கஷ்டம் என்ற ஒன்றோ, பிரச்சினை என்ற ஒன்றோ இந்தப் பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.
உங்களின் உள்ளுலக கஷ்டங்களைத்தான் வெளியுலகில் காண்கின்றீர்கள்.
உள்ளே நிம்மதியைக் கண்டு கொண்டால் வெளியே சுதந்திரத்தைக் கண்டு கொள்வீர்கள்”.
மனக்கோளாறுகள்தான் மற்ற மனிதர்களின் இயல்பான நடவடிக்கைகளைக் கூட கோளாறுகளாகக் காட்டுகின்றது.
ஆத்ம தியானம்
அமைதி தியானம்
உங்களைச்சுற்றி நிகழும் வாழ்க்கையானது ஓராயிரம் பரிமாணங்களைக் கொண்டது. அத்தனையும் ஆனந்த மயமானது.
கஷ்டம், ஏமாற்றம், துரதிஷ்டம் என்பதெல்லாம் உள்ளுலகில், உணர்வு சுருங்கியவர்களின் மனம் விடும் கப்சா. ஏமாற்றப்படக் காத்திருக்கும் உணர்வுதான் சிறிய எதிர்பாரா நிகழ்வுகளைப் பெரிய ஏமாற்றங்களாக மாற்றிக்காண்பிக்கின்றது.
அந்த உணர்வைக் கடந்துவிட்ட பிறகு ஏமாற்றம்கூட வாழ்க்கையின் இன்னொரு கூத்தாகவும், இன்னொரு நகைச்சுவையுமாகவே இருக்கும்.
வெளியுலகக் கஷ்டங்கள் மறைய உள்ளுலகக் கஷ்டங்கள் கரைய வேண்டும்.
கஷ்டங்கள் கரைவதற்குச் செய்ய வேண்டிய முதல் வேலை, நாம் கஷ்டங்கள் கைக்காட்டும் இடம் எங்கேயிருக்கிறது என்று சுய ஆராய்ச்சி செய்து பார்ப்பதுதான்.
அப்படிப் பார்த்தால் தான் தெரியும் ராட்சத சிலந்தி போல நம்மை நெருக்கும் மொத்த கஷ்டங்களும். மாயமானவை, இல்லாதவை, மறையக்கூடியவை!
மேலுள்ள தியானக் கருத்துக்களை கஷ்டங்கள் தலைதூக்கும்போதெல்லாம் செய்துபாருங்கள். பாரங்கள் நீங்கும், நீங்களும் சுதந்திரம் பெறுவீர்கள்,
ஆனந்தமாய் சிரிக்க ஆரம்பிப்பீர்கள்.
கஷ்டங்களே இல்லாத நிலையை உங்களுக்குத் தரும் யுக்திகளைத்தான் தியானம் என்ற பெயரில் பெறுகின்றீர்கள். எனவே தியானம் என்ற ஒன்றே உங்களுக்கு எல்லாவற்றையும் தரவல்லது என்பதை ஆழ்ந்துபுரிந்து கொள்ளுங்கள்.
