பூர்ணத்வம் என்றால் என்ன?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பூர்ணத்வம் செய்தல் என்றால்.. உங்களுடைய எல்லாக் குறைத்தன்மைகளோடும் நீங்கள் நிறைவுசெய்தல். உங்களை நீங்களே மன்னித்து, உங்களின் நிறைவுத்தன்மையை பிரகடனப்படுத்துதல்.
உங்கள் வாழ்வில் விழிப்புணர்வில்லாமல்... நீங்கள் உங்களைப் பலப் பாகங்களாக... துண்டுகளாகப் பிரித்து... பல மக்களுடனும்... பல விஷயங்களுடனும் பகிர்ந்துகொண்டிருப்பீர்கள். அந்தப் பகிர்ந்துகொண்ட உங்களுடைய பாகங்களையும், துண்டுகளையும் திரும்பப் பெறுவதே பூர்ணத்வம்.
இழந்துவிட்ட எல்லா விஷயங்களையும் திரும்ப மீட்டெடுப்பதே பூர்ணத்வம்! 'நீங்களும் பிரபஞ்சமும் ஒன்றே' என்று அறியும்வரையிலும், உங்களின் உயர்ந்த இறுதிநிலையை அறியும்வரையிலும், உங்களது அமைதியான விழிப்புணர்வையும், நிலையான ஆனந்தத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளும்வரையிலும், பூர்ணத்வம் செய்வது தொடர வேண்டும்.
ஒரு குழந்தை பூமிக்குக் இறங்கிவருவது 'அத்வைதம்' எனும் புதையலுடன்தான். இது, சமுதாயத்தால் ஒருபோதும் ஆதரிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தை, தன் உண்மையான அத்வைத நிலையிலேயே இருப்பதற்கு இந்தச் சமுதாயம் உதவுவதேயில்லை. அப்படிப்பட்ட ஒரு சமுதாயச் சூழலால் சிதறிப்போன தனது உணர்வுத் துண்டுகளை, வாழ்க்கை முழுவதும் அது தேட ஆரம்பித்துவிடுகிறது. ஆகவே, உங்கள் சுபாவமான அத்வைத நிலையைத் தக்கவைத்துக்கொள்வதே முழுமைசெய்தல்.
உங்கள் குறைவுணர்வுகள் என்பது உங்கள் மீது அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு 300 குழந்தைகளைப்போன்றது என்றால், ஒவ்வொரு நாளும் நீங்கள் பூர்ணத்வம் செய்யும்பொழுது அந்த 300 குறைவுணர்வுகளில். ஒரு பத்து கரையும்...பின் இருபது கரையும்... பின் முப்பது கரையும்... இப்படி எல்லாக் குறைவுணர்வுகளும் கரையக் கரையக் கரைய, திடீரென ஒரு நாள், நீங்கள் மட்டும் உங்களுடன் இருப்பீர்கள்.
எந்தக் குறைவுணர்வும் இல்லாமல் நீங்கள் உங்களுடன் அமர்ந்திருப்பீர்கள். உங்களுடைய தேவையற்ற அனைத்து குறைவுணர்வுகளும் கரைந்து விடும். இந்தத் தேவையற்ற புரிதல்கள்
உங்களை விட்டு விலகும்பொழுது, நீங்கள் அனுபவிக்கும் அந்த நிறைவுணர்வுதான் 'லட்சுமி'!
நம் எல்லா வறுமைக்கும் மூலகாரணம், நாம் வளர்ந்த பின்பும்கூட சிறுவயது குறைவுணர்வுகளோடு வாழ்வதுதான்.
குறைவுணர்வு - என்றால் என்ன?
கடந்தகாலம் சார்ந்த எண்ணங்கள்... துக்கங்கள்... சந்தேகங்கள்... குற்றவுணர்ச்சிகள்... வெறுப்புகள்... பயங்கள் - இவை உங்கள் நிகழ்காலத்தில் அமர்ந்துகொண்டு, எதிர்காலத்தையும் வாழவிடாமல் தடுப்பதுதான் 'குறைவுணர்வுகள்' என்கிறோம். இதை Incompletions என்று ஆங்கிலத்தில் சொல்வோம்.
உள் மனத்தடையாலோ அல்லது வெளியில் ஏற்படும் ஏதாவதொரு தடையாலோ, நீங்கள் நினைத்தபடி நிகழாமல் தடைபட்டு நின்றுவிடும் எந்தவொரு செயலுமே, உங்களுக்குள் ஒரு குறைவுணர்வாகத் தொக்கிநின்றுவிடுகிறது.
நிகழ்கால வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் போக்கில், அப்படியே பங்கேற்கவிடாமல் உங்களைத் தடுக்கும் கடந்தகால நிகழ்வின் தாக்கம் எதுவானாலும், அது குறைவுணர்வே. குறைவுணர்வுகள், உங்களைத் தாழ்த்தி, உங்களை உணர்ச்சிவசப்படுபவராகவும் பலவீனமானவராகவும் உணரச்செய்து, உங்களுக்குள் ஒரு திருப்தியற்ற உணர்வையே விட்டுச்செல்லும்.
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், குறைவுணர்வு உடையவராக இருப்பீர்கள். மன அழுத்தம் என்பது உங்களுக்குள் நீங்களே குறைவுணர்வுகளை வைக்கோல் போர்போன்று போட்டுத் திணித்து வைத்துக்கொள்வதைத் தவிர வேறெதுவுமில்லை.
'மனிதகுலத்தின் குறைவுணர்வுகள் மிக மிகப் பெரியதாக இருக்கின்றனவே' என்பதே மனிதகுலம் சுமந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய குறைவுணர்வு!